திரு அருட்பிரகாச வள்ளலார் (எ) இராமலிங்க அடிகள்
அறிமுகம்
ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!
என்ற பொருள் பொதிந்த கவிதையை நாமனைவரும் நமது பள்ளி அல்லது கல்லூரி வாழ்க்கைக்குள் ஒரு முறையாவது கேட்டிருப்போம்; எங்காவது, எவராவது ஓதுவதைப் பார்த்திருப்போம். அந்த அருமையான கவிதையை எழுதியவர் திருவருட்பிரகாச வள்ளலார் என்கிற விளிப்பெயருடன் அழைக்கப்படும் சிதம்பரம் இராமலிங்கர் என்ற இராமலிங்க அடிகளார். சிறுவனாக இருந்த இராமலிங்கர், ஆசிரியர் ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்..’ என்ற ஏழிளந்தமிழ் நூல்களில் ஒன்றைக் கற்பிப்பதைக் கேட்டவர், வேண்டும் என்றே படிக்க வேண்டும், வேண்டாம் என்று சொல்லிப் படிக்கக் கூடாது எனக் கருதிச் சொன்ன சந்தக் கவி இது.
Add Comment