அமெரிக்காவுக்குப் பலவகை கடவுச்சீட்டுகளில் வருபவர்கள் முறையாகப் பணி செய்து அரசுக்கு வருமான வரி செலுத்தி வாழ்பவர்கள் உண்டு. அவர்கள் குழந்தைகள் இங்கே அரசால் பெறும் சலுகைகள் குறித்து அரசாங்கத்துக்கோ மக்களுக்கோ எந்தக் குறையும் இல்லை. ஆனால், சட்டவிதிகளை மீறி அமெரிக்காவில் நுழையும் மக்கள், கடவுச்சீட்டுக் காலம் முடிந்தும் இங்கே தங்கும் மக்கள், குழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே வரும் பயணிகள் ஆகியோரின் பிள்ளைகள் குடியுரிமை பெறுவதே பிரச்சினை. அந்தக் குழந்தைகள் பெறும் சலுகைகளுக்காக அரசு செலவழிக்கும் நிதி அதிகரித்துக்கொண்டே போவதால் வரும் நியாயமான கோபம்.
இதைத் தடுப்பதாக டிரம்ப் தேர்தலின் போதே வாக்குக் கொடுத்திருந்தார். அமெரிக்காவில் சில விதிகள் உண்டு. என்னதான் அமெரிக்க உடல்நலக் காப்பீடுகள் கடினமானதாக இருந்தாலும், அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு வரும் ஒருவரைச் சிகிச்சை செய்ய இயலாது எனத் திருப்பி அனுப்பக் கூடாது. அவருக்கான சிகிச்சை அளித்தே ஆகவேண்டும். இதைத் தவிரப் பல மாநிலங்கள் தாய் சேய் நல மருத்துவ நலப் பரிசோதனை மையங்களை இலவசமாக நடத்துகின்றன. சட்டவிதி மீறி இங்கே தங்கி இருப்பவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 2022இல் மட்டும் 12 லட்சம். சட்டத்துக்குப் புறம்பாகத் தங்கியிருப்போருக்காக அரசு செய்யும் செலவுக்காக ஆகும் தொகை $5500 கோடி. இது உணவுக்காகவும் தங்கும் உறைவிடத்துக்காகவும் ஆகும் செலவு. அவர்கள் குழந்தைகள் இந்த நாட்டுக் குடிமக்கள் என்பதனால், காப்பீடு, படிக்கும் கல்விச் செலவு, உணவுச் செலவு, அதற்கான இலவசச் சீட்டு, என எல்லாவற்றையும் சேர்த்தால், வருடத்துக்கு அரசு செய்யும் செலவு $350,00 கோடி.
Add Comment