வேடன், கேரள மாநிலத்தின் ராப் இசைப்பாடகன். 31 வயது இளைஞன். (இயற்பெயர் ஹிரந்தாஸ் முரளி). தமிழிலும் மலையாளத்திலும் இவர் எழுதி இசையமைத்துப் பாடும் பாடல்கள் மிகப் பிரபலம். இதன்மூலம் தற்போது தென்னிந்தியா அளவில் ஒரு தவிர்க்கமுடியாத இசை நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார். கேரளா எனும்போது மலையாள மொழிப்பாடல்கள் ஒகே. அதெப்படி தமிழ்ப்பாடல்கள் என நம் மனத்தில் வினா எழலாம். அதற்கான விடை, வேடனின் பெற்றோரிடம் இருக்கிறது. இவரது தாய் ஈழத்தமிழர். தந்தை மலையாளி.
தாளக்கட்டுடன் பேச்சுமொழியை மிக வேகமாக உச்சரித்து பாடுவதுதான் ராப் இசை வடிவம். சில சமயம் தாளக்கட்டினை கலைத்து இஷ்டத்திற்கு மாற்றியும் இசைக்கலாம். ஆனால் பேச்சுமொழியை எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தோடு உச்சரிக்க வேண்டும். இது மிக முக்கியம். ராப் இசையின் இந்த சூசகத்தன்மை வேடனுக்கு மிக இயல்பாக கைவருகிறது. இது தவிர, வேடன் தான் இயற்றும் பாடலுக்கான கருப்பொருளை அவரது நிஜ வாழ்க்கையிருந்தும் சகமனிதர்களிடமிருந்தும் எடுத்து ஆள்கிறார். கற்பனை என்பதையும் தாண்டி நிஜ அனுபவம் என்பதால் அவர் இயற்றும் பாடலின் வரிகளும் கூர்மைப்பெற்று பார்வையாளர்களின் மனத்தில் எளிதாக நுழைந்து பதியம்போடுகிறது. வேடனின் குரலில் இயல்பாகவே ஒரு மென்சோகம் கவிழ்ந்துள்ளது. தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களும், வாழும் இடத்தில் ஆதிக்கசக்திகளால் ஆரம்ப காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களும் அந்தக்குரலோடு தங்களின் நிஜவாழ்வில் ஏற்பட்ட வேதனையை இயல்பாக பொருத்திப்பார்த்துக்கொள்கிறார்கள். இதில் வியப்பேதுமில்லை. ஆனால், இது எதுவுமே தெரியாத இன்றைய இளம் தலைமுறை அந்தக்குரலோடு தங்களை இணைத்துக்கொண்டதுதான் ஆச்சர்யம்.
இசை, பாடல்கள் இந்த இரண்டு குட்டிச்சாத்தான்களையும் ஏவி இளம் மனங்களைக் ட்டிப்போடும் வசியக்கலையில் வேடன் வல்லவராகத் திகழ்கிறார்.
தன்னுடயை ராப் ஆல்பத்தை முதலில் 2020ல் யூ டியூப்பில் வெளியிட்டார். குரலற்றவர்களின் குரல் (voice of the voiceless) எனும் தலைப்பில் வெளியான அந்த ஆல்பம் கேரளாவின் பட்டிதொட்டியெங்கும் வேடனைக்கொண்டு சேர்த்தது. சாதிக்கொடுமை, எளிய மனிதர்களின் மீதான அடக்குமுறை, இவற்றினை கேள்வி கேட்கும் தொனியில் அமைந்த அவரது பாடல் வரிகள் புரட்சிகரமான எழுச்சியாக மக்களால் கொண்டாடப்பட்டது. குரலற்றவர்களின் குரல் கேரளாவெங்கும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.















Add Comment