காலி முகத் திடல் ஆர்ப்பாட்ட பூமியில் அந்த சிங்கள இளைஞர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
‘நாங்கள் இப்போது அனுபவிக்கும் அத்தனை நெருக்கடிகளும் வடக்கு கிழக்கில் தமிழர்களின் கதவுகளை எப்போதோ தட்டியவைதான். 1996ம் ஆண்டு நாங்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் சாம்பியன்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த போது அங்கே மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் முன்னூறு ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருந்தது. பெட்ரோல் இல்லை, மின்சாரம் இல்லை, பள்ளிக்கூடங்கள் இல்லை, முறையான தேர்வுகள் இல்லை. கள்ளச் சந்தையில்தான் அத்தியாவசியங்களே கிடைத்தன. இன்று யுத்தம் முடிந்து பதின்மூன்று வருடங்களாகிவிட்டன. கடைசியில் எமக்கு என்ன நடந்தது? எமது சிந்தனைகளில் ஒரு அங்குலமாவது மாற்றம் வந்ததா?
வடக்கில் தமிழர்கள் பட்ட அத்தனை வலிகளையும் நாம் இன்று சுமக்கிறோம். அவர்களுக்கு இந்தத் துயரங்களுடன் சேர்த்து போனஸாக விமானங்களில் வந்து குண்டு மாரி பொழியப்பட்டது. நமக்கு அப்படி யாரும் குண்டு போடவில்லை என்றளவில் சற்றுத் திருப்தியடையலாம். ராணுவ வீரர்களைக் கொண்டாடிப் பூஜித்தோம். வாகனங்களில் எமது வீரத்தைப் பறை சாற்றும் சுலோகங்களை ஸ்டிக்கர்களாய் ஒட்டித் தீர்த்தோம். அன்று தமிழர்கள் மீது நீட்டப்பட்ட அதே துப்பாக்கி, இன்று நம் மீது திரும்பும் போதுதான் அடக்குமுறையின், அதிகாரத்தின் ஆழ அகலங்கள் எமக்குப் புரிகின்றன. இன்னொரு சமூகத்தின் மரண ஓலத்தை உணர முடிகிறது.”
Add Comment