டிகிரி காப்பி எந்தளவுக்குப் புகழ் பெற்றதோ, அதே அளவுக்கு அது தரப்படும் பித்தளை டபரா தம்ளரும் புகழ் மிக்கதுதான். இந்த இரண்டுமே கும்பகோணத்தின் அடையாளங்களுள் முக்கியமானவை. காப்பியைப் பிறகு பார்க்கலாம். அந்தப் பித்தளைப் பாத்திரங்களை இப்போது பார்ப்போம். காப்பி தம்ளர் மட்டுமல்ல. இதர அனைத்து விதப் பித்தளைப் பாத்திரங்களுக்கும் அன்று முதல் இன்று வரை கும்பகோணம் வள்ளி விலாஸ் என்றால் தனி மதிப்பு.
இந்த பிராண்டின் மூலஸ்தானம், குடந்தை மெட்டல் இண்டஸ்ட்ரீஸ். தமிழகத்திலேயே முதன் முதலாக உருவான உலோக உருக்கு உருட்டு ஆலை. இதன் பின்னர் தமிழகத்தில் பல இடங்களில் இதுபோன்ற ஆலைகள் உருவாயின. ஆனால் அவை தொடர்ந்து நடக்கவில்லை. நஷ்டம் காரணமாக நிறுத்தப்பட்டன. ஆனால் எப்படியோ இன்று வரை இந்தக் குடந்தை மெட்டல் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
விஎஸ்ஏ ஆவத்த செட்டியார் என்றால் கும்பகோணத்தில் அனைவருக்கும் தெரியும். இவரது குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை இன்று இத்தொழிலை நடத்திக்கொண்டிருக்கிறது. வள்ளி விலாஸ் பிராண்டில் பித்தளை, எவர் சில்வர் பாத்திரங்களை இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.
ஆவத்த செட்டியாரின் மகன் ஆத்மலிங்கம். இவரது மகன் வள்ளிக்கண்ணன்தான் இன்று இந்த ஆலையை நிர்வகித்து வருகிறார். பாத்திரத் தொழிலில் வள்ளி விலாஸ் வென்ற கதையை இவர்களிடம் கேட்டோம்.
Add Comment