இந்தியக் கடற்படையில் மூன்று புதிய போர்க்கப்பல்கள் இணைக்கப்பட்டன. இவை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை என்பது முதற்பெருமை. நுட்பத்திலும், திறனிலும் சர்வதேச வல்லமை கொண்டவை என்பது இரண்டாவது. ஐஎன்எஸ் வாக்ஷீர், ஐஎன்எஸ் சூரத் மற்றும் ஐஎன்எஸ் நீலகிரி பி17ஏ என்பன இந்த மூன்று புதிய தயாரிப்புகளின் பெயர்கள்.
உலகிலேயே ஆறாவது பெரிய கப்பற்படையாக இப்போது இந்தியா விளங்குகிறது. இந்தியப் போர்க்கப்பல்களுக்கும், கடல்வழிப் பாதுகாப்புத் தளவாடங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உண்டு. ஹரப்பா நாகரிகத்தின் போது கிமு 2300இல் லோதல் என்ற பழங்காலக் கப்பல் தளத்தில் உலகின் முதல் கப்பல் சரக்குகள் கையாளும் பகுதி (Tidal dock) கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. புகழ்பெற்ற இரண்டு இந்திய வானியலாளர்கள், ஆர்யபட்டர் மற்றும் வராஹமிஹிரர் இருவரும், விண்ணியல் அமைப்பைத் துல்லியமாக வரைபடமாக்கி, நட்சத்திரங்களின் மூலம் கப்பலின் நிலையைக் கணக்கிடும் முறையை உருவாக்கினர். அலெக்சாண்டரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தபோது, சிந்துநதி இரண்டாகப் பிரியும் இடத்தில் அவர் ஒரு துறைமுகம் கட்டிய வரலாற்றுக்குறிப்புகள் உள்ளன.
சந்திரகுப்த மௌரியரின் கடற்படை குறித்த விரிவான சித்திரம் வரலாற்றுக் குறிப்புகளில் கிடைக்கிறது. ராஜேந்திரசோழன் கப்பற்படை கொண்டு கடாரம் வென்றதைப் பள்ளிப் பாடங்களிலேயே படித்திருக்கிறோம்.
Add Comment