ஹமாஸ் ‘உடனடியாக’ கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டு 1948 நக்பாவுக்குச் சற்றும் குறைவில்லாத இன்னொரு பேரழிவு நிகழ்வதைத் தடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் மஹ்முத் அப்பாஸ். ஹமாஸ் எப்போதுமே அப்பாஸ் கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. பெரும்பான்மை பாலஸ்தீனியர்கள் அப்பாஸ் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அப்பாஸின் அறைகூவல் யாருமே இல்லாத கடையில் டீ ஆற்றுவதைப் போல இருந்தாலும் பேரழிவுக்கான சாத்தியங்கள் கூடிக் கொண்டேதான் செல்கின்றன.
பார்த்த உடனே பிடித்துவிடும் யாசர் அராபத் போன்ற கவர்ச்சிகரமான தலைவரல்ல அப்பாஸ். பழகப் பழகவும் மக்களுக்கு இவரைப் பிடிக்கவில்லை. யாசர் அராபத் மறைவுக்குப் பிறகு 2005-ல் இருந்து தொடர்ந்து தலைமைப் பொறுப்பு வகிக்கிறார். இவர் தலைமையில் இயங்கும் பாலஸ்தீன தேசிய அத்தாரிட்டி ஒன்றே இஸ்ரேலும் மேற்கு நாடுகளும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் பாலஸ்தீன அமைப்பு. மக்கள் மத்தியில் ஆதரவோ வெறுப்போ அதிகமின்றிப் பதவியில் அமர்ந்தார். அதன் பிறகு தேர்தல் நடக்கவில்லை. கருத்துக் கணிப்புகள்தான் எடுக்க முடிந்தது. சமீபத்தியக் கணக்கெடுப்பின்படி, எண்பது விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் அப்பாஸ் பதவி விலக வேண்டும் என்றே கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இத்தனை வருடங்களில் ஓஸ்லோவில் ஒப்புக்கொள்ளப்பட்ட எதுவும் முறையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை. அப்பாஸால் யூதக் குடியேற்றங்களைத் தடுக்க முடியவில்லை. மொத்தமாக இதில் அப்பாஸைக் குறை கூற முடியாது என்றும் இஸ்ரேல் தான்தோன்றித் தனமாக செயல்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சிலர் அப்பாஸுக்கு ஆதரவாகக் கருத்து சொல்கிறார்கள். தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால் மக்கள் ஆதரவாவது எஞ்சியிருக்கும். ஆனால் இஸ்ரேல் படையினருடன் சேர்ந்து கொண்டு பாலஸ்தீன மக்களைத் துன்புறுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஊழல் பெருகி விட்டதாகவும் மக்கள் நினைக்கிறார்கள்.
Add Comment