ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அவரது சகோதரியும் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவருமான ஒய்எஸ் ஷர்மிளா ரெட்டிக்கும் சொத்துத் தகராறு தீவிரமடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் பத்தாம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
2009ஆம் ஆண்டு ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் ஆந்திர மாநிலத்தில் அரசியல் பிரமுகர்கள். மகன், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிறுவனர், தலைவர். மகள் ஷர்மிளா ரெட்டி ஆந்திரா மாநில காங்கிரஸ் தற்போதைய தலைவர்.
எதிர்பாராத திடீர் இறப்பு என்பதால் ராஜசேகர ரெட்டி அவருடைய சொத்துகளை வாரிசுகளுக்கு எழுதி வைக்கவில்லை. அவர்களும் ஒற்றுமையாக இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் மோதல் தொடங்கியது. இப்போது குடும்பச் சொத்துத் தகராறு வரை சென்றுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா எனப் பிரிக்கப்படாமல் முழுமையான ஆந்திர மாநிலமாக இருந்தபோது முதல்வராக இருந்தவர் ஜெகனின் தந்தை. அவரது இறப்புக்குப் பிறகே ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி அரசியலில் சேர்ந்தார். அப்பா இருந்த காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்தார். தந்தை இறந்ததையொட்டி அப்போது ஆந்திர மாநிலம் முழுவதும் ஓர் இரங்கல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
Add Comment