5. அடையாளம்
சமஸ்கிருதத்தில் ‘பல்’ என்றால் பலம். ‘ஊச்’ என்றால் உயர்ந்தது அல்லது உயரமானது. இந்த இரண்டு சொற்களும் இணைந்துதான் பலூச் ஆனது. பலூச் மக்கள் பலசாலிகள். தவிர உயரமானவர்கள். அதைவிட முக்கியம், அவர்கள் நம்மவர்கள். சமஸ்கிருதத்தில் இருந்து பல மொழிகள் மட்டுமல்ல; பலூச் என்கிற இனமேகூடப் பிறந்திருக்கிறது.
என்று எங்கேயாவது கோஷ்டி கானம் இசைக்கப்பட்டால், நம்பாதீர்கள்.
இன்றைக்கு பலூசிஸ்தான் மக்களும் அங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கும் விடுதலை இயக்கங்களும் இந்தியாவைத் தங்கள் நண்பன் என்று கருதலாம். அது வேறு. வரலாற்று ரீதியில் இவ்விரு தரப்புக்கும் இதர ஒட்டுறவுகள் ஏதும் இருந்ததற்கான சாட்சியங்கள் இல்லை. சிந்து வெளி நாகரிக காலத்துக் கண்டுபிடிப்புகள் சில இன்றைய பலூசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளன. ஆனால், அதற்கும் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பே பலூசிஸ்தான் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்திருப்பதற்கான தடயங்கள் உண்டு என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
உலக வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தீர்களானால், துருக்கி-ஆர்மேனியா-அஜர்பைஜான் முட்டிக்கொள்ளும் முனையில் பலாசகான் (Bałasakan) என்று ஒரு பிராந்தியம் தெரியும். பஸ்கான் என்றும் அந்த இடத்தை அழைப்பார்கள். காலம் கணக்கிட இயலாத காலம் தொட்டு பலாஷ்சிக் (Balashchik) என்றொரு இனக்குழுவினர் அங்கே வசித்து வருகிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இயேசுநாதர் பிறப்பதற்கு இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு அந்தப் பிராந்தியத்து மக்கள் கால்நடைகளை மேய்த்தபடி மத்திய ஆசியாவின் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்றார்கள். இன்றைய பலூசிஸ்தான் பிராந்தியத்தில் வசிப்பவர்கள் அவர்களது வம்சத்தினர்தாம்.
நல்ல வளமான மண். ரக்ஷான், பசோல், ஹிங்கோல், தஸ்த், ஸோப், கெச் என்று பரமபத அட்டையில் நெளியும் பாம்புகளைப் போல மாநிலமெங்கும் ஏராளமான நதிகள். பெரும்பாலும் வற்றாதவை. எங்கெங்கும் மலைகள். நல்ல உயர்தரமான பாதாம், திராட்சை ரகங்கள், பேரீச்சை, ஆப்பிள் என்று என்னென்னவோ விளைகின்றன. தொழில் நசிந்து, விவசாயம் சீரழிந்துவிட்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்திலேயே பலூசிஸ்தானைப் பாகிஸ்தானின் பழத் தோட்டம் என்கிறார்கள். என்றால், நன்றாக இருந்த நாள்களை எண்ணிப் பார்க்கலாம். யூட்யூப் விடியோக்களில் காணக்கிடைக்கும் பாலை நிலங்களையும் முரட்டு மலை முகடுகளையும் பார்த்துவிட்டு அதுதான் பலூசிஸ்தான் என்று எண்ணிவிடலாகாது. அதுவும் பலூசிஸ்தான். அவ்வளவுதான்.









Add Comment