60. பிளவுகளும் பிரிவுகளும்
பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தை அறிமுகம் செய்துகொள்ளும்போதே அது செய்த மகத்தானதொரு பிழையை முன்வைத்துத் தொடங்க வேண்டியதாகிவிட்டது. கஷ்டம்தான். ஆனால் வேறு வழியில்லை. வாளால் அறுத்துச் சுட்டாலொழிய சில நீண்ட நாள் பிரச்னைகள் ஏன் பிரச்னைகளாகவே இருக்கின்றன என்பதற்குக் காரணம் விளங்காது. ஜியா உல் ஹக்கும் பேனசிர் புட்டோவும் நவாஸ் ஷரீஃபும் பலூசிஸ்தான் சிக்கலுக்கு எந்தத் தீர்வும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சுமார் இருபதாண்டுக் காலம் அவர்களால் பிராந்தியத்தை அமைதியாக வைத்துக்கொள்ள முடிந்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்த போரில் அதன் சார்பு நிலையை எடுத்த முஷாரஃப், அதன் மூலம் பாகிஸ்தானுக்கு நிறைய பணம் வரத் தொடங்கியிருப்பதாக பகிரங்கமாகவே அறிவித்தார். பாகிஸ்தான் இனி ஏழை நாடல்ல என்றே சொன்னார். ஆனால் பலூசிஸ்தானுக்கு மட்டுமல்ல. மொத்த பாகிஸ்தானுக்குமே அவர் ஒன்றும் செய்யவில்லை. அவர் அதிகாரத்தில் இருந்த ஒன்பதாண்டுக் காலமும் பாகிஸ்தான் குமுறிக் கொட்டும் எரிமலையாகத்தான் இருந்தது. எங்கெங்கும் அதிருப்தி. எல்லா இடங்களிலும் வன்மம். எப்போதும் விரோதம். அவர் செல்லும் இடமெல்லாம் யாராவது கொல்லப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
வெறுப்பில் என்ன செய்வதென்று புரியாமல்தான் அவர் தனது மொத்தக் கோபத்தையும் பலூசிஸ்தான்மீது காட்டினார். கட்டற்ற அடக்குமுறை. கணக்கற்ற கொலைகள். இடைவிடாத தாக்குதல்கள். மாநிலத்தில் இருந்த கொஞ்சநஞ்ச வருமான சாத்தியங்களையும் சுத்தமாகத் துடைத்து ஏறக்கட்டும் நிலைக்குக் கொண்டு போனவர் அவர்தாம். இதில் சந்தேகமே இல்லை.
அது விளைவித்த கோபம்தான் பி.எல்.ஏவுக்கு மேலோங்கியிருந்தது. கோபம் உச்சிக்கு ஏறும்போது கவனப்பிசகு எளிதாக நேரும். சிந்தனை தடுமாறும். தவறுகள் தாராளமாக நடக்கும். அப்படி நடந்ததைத்தான் பார்த்தோம். ஆனால் தவறு என்பது எப்போதும் ஒன்றில் தொடங்கி ஒன்றோடு முடிவதில்லை. செய்யத் தொடங்கிவிட்டால் அது நிற்காது. நிறுத்தவும் முடியாது. BLA ஒரு விஷயத்தை முற்றிலுமாகச் சிந்திக்க மறந்திருந்தது. பலூசிஸ்தான் என்பது பாகிஸ்தானின் ஒரு மாநிலம் மட்டுமல்ல. அதன் ஒரு பகுதி ஆப்கனிஸ்தானில் இருக்கிறது. இன்னொரு பகுதி இரானில் இருக்கிறது. மூன்று வேறு வேறு நாடுகளின் எல்லைகளுக்கு உட்பட்ட ஒரு பரந்த நிலப்பரப்பு அது. பலூச்சி என்னும் இனம் வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அவர்கள் மூன்று வேறு வேறு தேசிய அடையாளங்களைக் கொண்டிருந்தார்கள்.










Add Comment