13. ஐந்நூற்று அறுபத்திரண்டு + ஒன்று
பலூசிஸ்தானில் அன்றைய கலாட் ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்தவர் பெயர், மிர் சிர் அஹ்மத் யார் கான் அஹ்மத்சாய் (Mir Sir Ahmed Yar Khan Ahmedzai). நாசிர் கானைப் பார்த்தோம். பிறகு இந்த கானைப் பார்க்கிறோம். முன்னும் பின்னும் வந்த மற்ற கான்கள் அவ்வளவு முக்கியமில்லையா என்றால், அப்படியல்ல. எல்லா நாடுகளிலும் எல்லா காலக்கட்டங்களிலும் இருந்த எல்லா மன்னர் வகையறாக்களையும் போல பலூசிஸ்தானிலும் அது குடும்பப் பதவியாக இருந்தது. தந்தை. தந்தைக்குப் பின் மகன். மகனுக்குப் பிறகு அவனது மகன். நடுவே ஏதாவது இடறுமானால் மன்னர், அவரது தம்பி அல்லது சித்தப்பா மாமன் மச்சான். ஜனநாயகக் காலத்திலும் இங்கே அப்படித்தான் என்றாலும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டு மாற்றிப் போட ஒரு வாய்ப்பாவது மக்களுக்கு உண்டு. மன்னர் காலத்தில் அது கிடையாது. அவ்வளவே வித்தியாசம்.
இருக்கட்டும். இந்த கானைக் கவனிப்போம். அஹ்மத் யார் கான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து அப்போது இரண்டு வருடங்கள்தாம் ஆகியிருந்தன. அதாவது 1933. குறிப்பாக, சிறப்பாகச் சொல்வதற்கு ஆட்சியில் ஏதுமில்லை என்றாலும் சிக்கல் இல்லாமல் அவர்பாட்டுக்குத் தன் காரியங்களைக் கவனித்துக்கொண்டிருந்தார். பிரிட்டிஷ் அரசுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையில் குறை கிடையாது. பலூசிஸ்தான் முழுவதும் அவர்கள் தங்குதடை இன்றித் தமக்கு வேண்டியதைச் செய்துகொண்டு, சுதந்தரமாக உலா வந்துகொண்டிருந்தார்கள். ராணுவப் போக்குவரத்திலோ, வர்த்தகப் போக்குவரத்திலோ, இதர வேறு எந்த வகையிலோ சற்றும் உரசல் உண்டாகாமல், தளுக்காகத்தான் பார்த்துக்கொண்டார்.
உண்மையில் அது அவ்வளவு எளிதாக ஆளக்கூடிய காலமாக இருக்கவில்லை. ‘இளம் பலூச்சிகள்’ அமைப்பு வீறுகொண்டு எழுந்து எங்கெங்கும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ‘அஞ்சுமான்’ என்ற பெயரில் அவர்கள் இன்னும் வலுவான அமைப்பாகத் திரண்டு மிர் முஹம்மத் அலி என்பவர் தலைமையில் சுதந்தர பலூசிஸ்தான் மட்டுமல்லாமல், ஜனநாயக பலூசிஸ்தான், பெண் விடுதலை பலூசிஸ்தான், சமூக நீதி பலூசிஸ்தான், அனைவருக்கும் கல்வி பலூசிஸ்தான், பழங்குடிச் சட்டங்களை ஒழித்த பலூசிஸ்தான் என்று ஏகப்பட்ட எதிர்காலக் கனவுகளை எழுதி வைத்துக்கொண்டு ஒவ்வொன்றுக்காகவும் போராட ஆரம்பித்திருந்தார்கள். பிரிட்டிஷ் அரசு, இப்படிப் போராட வீதிக்கு வரும் பலூச்சிகளையெல்லாம் சத்தமில்லாமல் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு பலூசிஸ்தான் எல்லைக்கு அப்பால் கொண்டு இறக்கிவிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது. அதற்கு எதிராகவும் மக்கள் புரட்சி செய்யத் தொடங்க, பிராந்தியமெங்கும் சிறிது கலவரம் கூடித்தான் இருந்தது.
ஆனபோதிலும் இந்தப் புதிய கான் அனைத்தையும் சமாளித்து, எல்லா தரப்பினரையும் அரவணைத்துக்கொண்டு போகத்தான் பார்த்தார். ஆனால், எப்போது பிரிட்டிஷ் அரசு, தனது இதர அனைத்து சமஸ்தானங்களின் மன்னர்களோடு பலூசிஸ்தான் மன்னரையும் ஒன்றாகக் கூப்பிட்டு உட்கார வைக்கப் பார்த்ததோ, அப்போது அவர் சிலிர்த்துக்கொண்டு முடியாது என்று சொன்னார்.










Add Comment