24. மை
தஞ்சப்புரியில் அவன் உலாவிக்கொண்டிருந்தபோது வீதிகளிலும் அங்காடிகளிலும் மனை வாசல்களிலும் தரு நிழல்களிலும் கூடியிருந்த மக்கள் எதையெதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவனது செவியுட் புகுந்து, கணப் பொழுதும் தாமதிக்காமல் புகுந்த வண்ணமே வெளியேறி உதிர்ந்த சில தகவல்களையும் பெயர்களையும் நான் கவனித்துச் சேமித்து வைத்தேன்.
அருமொழி என்ற சோழ மன்னன் தஞ்சப்புரியில் எடுப்பிக்கத் தீர்மானம் செய்திருந்த கோயிலைப் பற்றியே பெரும்பாலும் மக்கள் சல்லாபித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரொருவர் சிந்தையிலும் அக்கோயிலை அன்றி இன்னொன்று விரிவான பேசுபொருளாக இல்லை என்பதை அறிந்தேன். மீண்டும் மீண்டும் சில பெயர்களை அவர்கள் உச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். வீரசோழன் குஞ்சரமல்லன் என்னும் ராசராசப் பெருந்தச்சன். இலாத்திச் சடையனென்னும் கண்டராதித்தப் பெருந்தச்சன். நித்தவினோதப் பெருந்தச்சன். சிரீகாரிய பொய்கை நாட்டுத் தென்னவன் மூவேந்த வேளன். சாத்தன்குடி வெள்ளாளன் இரவிபாளுருடையான்.










Add Comment