15. வாராந்திர வாசகர் கடிதம்
கலாட் ராஜ்ஜியத்தின் அன்றைய மன்னர் மிர் அஹ்மத் யார் கான் முட்டாள் அல்ல. நிச்சயமாக அல்ல. அவர் முஸ்லிம் லீகை ஆதரித்ததும் ஜின்னாவுடன் நட்பு பாராட்டியதும் ரசிக மனோபாவத்தினாலோ, இயல்பான விருப்பத்தினாலோ அல்ல. ஜின்னாவுடன் அவருக்கு இருந்த நட்பு உண்மையானது. அதில் சந்தேகமில்லை. ஆனால், பலூசிஸ்தானின் எதிர்காலத்துக்கு எது நல்லது என்று யோசிக்கும்போது, பாகிஸ்தானின் (அது அப்போது உருவாகியிருக்கவில்லை. உருவாகுவதற்கான சாத்தியங்கள் மெல்ல மெல்ல உயர்ந்துகொண்டிருந்தன.) நட்புறவு இன்றியமையாததாக இருக்கும் என்று அவர் கருதினார். என்ன இருந்தாலும் அண்டை நாடு. என்ன இருந்தாலும் முஸ்லிம் நாடு. என்ன இருந்தாலும் ஜின்னா நண்பர். அதனாலேயே பலூசிஸ்தானின் சுதந்தரத்தை அவர் ஆதரிப்பார் என்று இந்தக் கான் நினைத்தார்.
ஆனால் பலூச்சிகளுக்கு இது ஏன் புரியவில்லை? எதனால் அவர்கள் பாகிஸ்தான் என்ற நாடு உருவாவதை ஒரு பொருட்டாகவே கருதாமல், பலூசிஸ்தானின் விடுதலையை மட்டும் பேசுகிறார்கள் என்று அவருக்கு விளங்கவில்லை. அல்லது அவர் அதை விளங்கிக்கொள்ள விரும்பவில்லை. தன்னால் முடிந்தவரை பலூசிஸ்தான் பழங்குடித் தலைவர்கள் அனைவரையும் அழைத்துப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்திப் பார்த்தார். கலாட் தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுடன் பேசிப் பார்த்தார். இளைஞர்களைத் தனியே சந்தித்து உரையாடிப் பார்த்தார். யாரும் அவர் சொல்வதைப் பொருட்படுத்தத் தயாராக இல்லை.
அவர் தமது மக்களுக்குத் தெரிவிக்க விரும்பியதெல்லாம் ஒன்றுதான். ‘நாம் பாகிஸ்தானுடன் சேரப் போவதில்லை. கலாட் ராஜ்ஜியம் என்றைக்கும் இருக்கும். தனி நாடாகத்தான் இருக்கும். ஆனால் பாகிஸ்தான் உருவானால், நமக்கு அதன் ஆதரவு நிச்சயமாகத் தேவைப்படும். இருபதாம் நூற்றாண்டின் அரசியல்-சமூகச் சூழ்நிலையை முன்வைத்து யோசிப்போமானால், சுற்று வட்டார சுதந்தர நாடுகளுக்கு நடுவே, வளர்ச்சியே காணாத பலூசிஸ்தான் நீடித்து நிலைப்பது சிரமம்.’
அப்படியானால் வளர்ச்சிக்கு வழி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு முறைத்துக்கொண்டு போனது பலூச்சி சமூகம். இந்த கான் பத்து காசு பெற மாட்டார்; நாம் வேறு வழி யோசிப்போம் என்று ஆங்காங்கே ரகசியக் கூட்டங்கள் போடப்பட்டன. சர்தார்களும் இதர பழங்குடித் தலைவர்களும் மன்னரை அகற்றிவிட்டு மாற்று ஆட்சி அமைக்கலாமா என்பது வரை பேசத் தொடங்கியிருந்தார்கள்.










Add Comment