20. போர்க் கணக்கு
கலாட்டின் மன்னர் மிர் அஹ்மத்யார் கான், பிரிட்டிஷார் சமூகத்துக்கு வாராந்திர வாசகர் கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தோம். வேறு வழியே இல்லாமல் அங்கிருந்து நேரடியாக இந்திய அரசியலுக்கு – குறிப்பாக, முஸ்லிம் லீக்கின் தோற்றம் முதல் ஜின்னா அதன் தலைமைப் பொறுப்புக்கு வந்தது வரை கவனிக்க வேண்டியதாகிவிட்டது. அந்தக் கதையின் அடிப்படை தெரியாமல் இந்த சரித்திரம் சரியாகப் புரியாது என்பதால்தான் இந்தத் தாவிக் குதிப்பு. பரவாயில்லை. விட்ட இடத்தில் இருந்து தொடர்வோம்.
1939 ஆம் ஆண்டு மிர் அஹ்மத்யார் கானின் கவலை ஜின்னா அல்ல. மிக நிச்சயமாக அல்ல. அவரைப் பொறுத்தவரை ஜின்னா அவரது நண்பர். தவிர பலூசிஸ்தான் மக்கள் மீது அன்பு கொண்டவர். கலாட் பேரரசின் உரிமைகளை மதிப்பவர். மக்களுக்கு அது புரியவில்லை என்றால் அது ஜின்னாவின் தவறல்ல. பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்து மொத்தமாகக் கிளம்பிப் போகும்போது இந்துஸ்தான் – பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளாகப் பிரித்துக் கொடுத்துவிட்டுப் போகத்தான் போகிறார்கள். அப்போது பலூசிஸ்தான் என்கிற நாடு பழையபடி சுதந்தரமாக அங்கே இருக்கும். இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ அதன் இருப்பிலும் சுதந்தரத்திலும் எந்தச் சம்பந்தமும் இருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் அவர் நினைத்தார்.
ஆனால் பிரிட்டன் குறுக்கே புகுந்து குட்டையைக் குழப்பிவிடாதிருக்க வேண்டும். 1876 ஆம் வருடத்து ஒப்பந்தத்தை மதித்து, பலூசிஸ்தானின் சுதந்தர அந்தஸ்தை மறு உறுதி செய்துவிட்டுப் போனால் நல்லது. அது ஒன்றுதான் அவரது பெருங்கவலை. அதற்காகத்தான் அவர் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார்.
ஆனால் முன்பே விவரித்தபடி, அன்றைக்கு இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கலாட்டின் மன்னரை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அவரது தவிப்பும் பதற்றமும் நிறைந்த கடிதங்கள் யாவும் அவர்களுக்குக் குறுக்க வந்த கௌசிக்காகவே காட்சியளித்தன. உண்மையில் அவர்கள் பொருட்படுத்திச் சிந்திக்கும் தரத்தில் பலூசிஸ்தான் அன்றைக்கு இல்லை என்பதுதான் அடிப்படைக் காரணம். பெரிய வருமானம் தராத மாகாணம். பெரும்பாலும் பழங்குடி இன மக்கள். அவர்களுக்குள் நூற்றுக்கணக்கான குழுக்கள். முரட்டு இயல்பு. உலகெங்கும் ஆதி மக்கள் எப்படி இருப்பார்களோ அப்படித்தான் அவர்களும் இருக்கிறார்கள். ஒரு தேவை ஏற்பட்டால் நான்கு பீரங்கிகளைக் கொண்டு நிறுத்தி அடக்கிவிட முடியும். ஆனால் மன்னர் பிரிட்டிஷ் அரசுக்குப் பணிந்து நடந்துகொள்வதால் பொறுத்திருந்தார்கள். அவ்வப்போது அவரது கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்பார்கள். பெரும்பாலும் நிராகரித்துவிடுவார்கள். ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றை எண்ணி மன்னர் மனம் மகிழ்ந்து மக்களைக் கூப்பிட்டு அறிவித்துக் கொண்டாடிக்கொள்வார்.










Add Comment