Home » நீ வேறு, நான் வேறு – 28
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 28

28. தம்பி

யாரும் யார் காலிலும் விழுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. உமக்கே நாம் ஆட்செய்தோம் என்று பரம்பொருளுக்கு மட்டுமே பணிய வேண்டுமென்பது இதன் உட்பொருள். கலாட்டின் மன்னர் அதனால்தான் மக்கள் காலில் விழவில்லை. ஆனால் அவரது கதறல் புரிவதற்கு மொழி கூட ஒரு பிரச்னை இல்லை. அவரிடம் ஒரு காரணம் இருந்தது. அவரளவில் அது நேர்மையான காரணம். தனது சரித்திரம் முழுவதும் பலூசிஸ்தான் ஏராளமான யுத்தங்களைக் கண்டுவந்திருக்கிறது. எண்ணிலடங்காத உயிரிழப்புகளைப் பார்த்திருக்கிறார்கள். அந்நியப் படையெடுப்பின் போதெல்லாம் பலூச்சிகள் வீரத்துடன் எதிர்த்து நின்று போரிடுவதில் சுணங்கியதில்லை. ஆனால் இறுதி இழப்பு என்று பார்த்தால் அவர்களுடையதாகவே இருக்கும். இன்னொரு ரத்தக்களறி வேண்டாம் என்று எண்ணித்தான் பாகிஸ்தானுக்குப் பணிந்ததாக அவர் சொன்னார்.

ஆனால் நியாய தருமப்படி பார்ப்பதென்றாலும் சரி; சட்டப்படி ஆனாலும் சரி. அந்தக் கட்டாயக் கல்யாணம் செல்லாது என்றால் செல்லாதுதான். ஏனென்றால், பழைய நூறு சதவீத மன்னராட்சிக் காலமென்றால் மிர் அஹ்மத்யார் கானின் கையெழுத்து மட்டும் போதும். கதை முடிந்தது என்று எழுந்துவிடலாம். ஆனால் பாகிஸ்தான் சுதந்தரமடைந்த அதே நாளில் தன்னையும் ஒரு சுதந்தர ஜனநாயக நாடாக அறிவித்துக்கொண்டு, அரசியல் அமைப்புச் சட்டமெல்லாம் வகுத்து, மேலவை-மக்களவை ஏற்பாடெல்லாம் செய்துகொண்டு, பிரதம மந்திரி தலைமையில் ஓர் அமைச்சரவையை நிறுவி – இத்தனையும் நடந்திருந்தது. இந்த இரண்டு அவைகளும் பாகிஸ்தானுடன் இணையலாமா என்ற கேள்விக்குக் கூடிப் பேசி, கூடாது என்று தெள்ளத் தெளிவாகத் தமது தீர்ப்பைத் தந்துவிட்டிருந்தன. அதுவும் இரண்டு முறை. நாடாளுமன்றம் நிராகரித்திருந்த திட்டத்தை மன்னரே புறக்கணித்ததை மக்களால் ஏற்க இயலவில்லை. ரத்த ஆறு ஓடும். அவ்வளவுதானே? ஓடிவிட்டுப் போகட்டுமே? நாம் பார்க்காத யுத்தமா? நாம் பார்க்காத ரத்தமா? என்று அவர்கள் கொதித்தெழுந்து நின்றார்கள்.

அப்படிக் கொதித்தெழுந்து இணைப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களுள் ஒருவர், மன்னரின் தம்பி. அவர் பெயர் அப்துல் கரீம் கான்.

கலாட்டின் இளவரசராக, மன்னர் மிர் அஹ்மத்யார் கானின் வலது கை இடது கை நம்பிக்கை அனைத்துமாக இருந்தவர். தொடக்கம் முதலே முகம்மது அலி ஜின்னாவுடன் அதிகமாக நெருங்க வேண்டாம் என்று எச்சரித்து வந்தவர். கலாட் என்றென்றும் சுதந்தர நாடாக மட்டுமே இருக்கும்; பாகிஸ்தானுடன் அது இணையவேண்டும் என்று நானும் நினைக்கவில்லை, ஜின்னாவும் விரும்பவில்லை என்று மன்னர் திரும்பத் திரும்பச் சொல்லி அவரை அமைதிப்படுத்திக்கொண்டிருந்தார். ஆனால் அவரது சந்தேகமும் மக்களின் அச்சமும்தான் உண்மை ஆகியிருந்தனவே தவிர மன்னரின் கணிப்பு பொய்த்துவிட்டது. அப்துல் கரீம் கானுக்கு இது தந்த வெறுப்பும் ஆத்திரமும் சிறிதல்ல.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!