18. யாத்திரை
அவன் வெளியே புறப்பட்ட சமயத்தில் நீலக்கிளி குடிசையின் வாயிலை வந்தடைந்தது. நின்று, அதைப் பார்த்தான். மீண்டும் உள்ளே சென்று ஒரு கையில் நெல் அள்ளி வந்து போட்டான். கிளி, கிக்கிக்கி என்றது. மனத்துக்குள் எதையாவது நினைக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. சிந்தைத் தொடர்பில்லாமல் தொண்டையிலிருந்து வந்த ஒலியை அவன் நன்றி என்று எடுத்துக்கொண்டதையும் கவனித்தேன். அவன் மகிழ்ச்சியடைந்தான். வீசிய நெல் மணிகளை அது கொத்தித் தின்பதைச் சிறிது நேரம் நின்று பார்த்தான். தன் வலக்கையை அதன் முன்னால் நீட்டினான். நீலக்கிளி அதைக் கவனிக்காதது போலக் கொத்தித் தின்பதில் கவனமாக இருந்தது. ஆனால் அது கவனித்ததை நானறிவேன். எதையோ பெரிதாக எதிர்பார்த்துக் கொடிமுல்லை வந்திருக்கிறாள் என்று தோன்றியது.
இல்லை. நான் அவ்வாறு நினைக்கலாகாது. அது கொடிமுல்லையாகத்தான் இருக்குமென்பதற்குப் புறத் தோற்ற சாட்சிகளேதும் கிடையாது. கொடிமுல்லை என்கிற பெண்ணையே நான் கண்டதில்லை. கொடிமுல்லை என்பது வெறும் ஒரு பெண் குரல். அபுதுவின் குரலைப் போல. சீலனின் குரலைப் போல. இன்னும் நான் கேட்டிராத எத்தனையோ ஒற்றர்களின் குரல்களைப் போல. அவர்களை இயக்கிக்கொண்டிருக்கும் யாரோ ஒரு மனிதனின் குரலைப் போல.










Add Comment