29. பத்து வருடக் கடுங்காவல்
ஒரு விடுதலை இயக்கமோ, தீவிரவாத இயக்கமோ இன்றைக்கு இன்னொரு நாட்டில் போய் உட்கார்ந்துகொண்டு செயல்படுவது மிக எளிய செயல். ஆதரித்து, இருக்க இடம் கொடுக்க ஆள் இருந்தால் போதும். இதர செலவுகளை வையம் தழுவிய வசூலில் முடித்துக்கொள்ளலாம். 1991 ஆம் ஆண்டு வளைகுடாப் போரில் சவூதி அரசாங்கம் அமெரிக்க ஆதரவு நிலைபாடு எடுத்ததன் தொடர்ச்சியாக ஒசாமா பின்லேடன் தனது குழுவினருடன் சூடானுக்குப் போனார். அப்போது அங்கே ஒரு ராணுவ ஆட்சி நடந்துகொண்டிருந்தது. சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். ஏதோ செய்தார்கள். எப்படியோ ஆட்சியைப் பிடித்தார்கள். மூச்சைப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு நாளையும் கடந்துகொண்டிருந்தார்கள். சூடான் அன்றைக்குப் பரம தரித்திர தேசம். யாராவது பார்த்து நல்லது செய்தால்தான் உண்டு என்ற நிலைமை.
ஒசாமா பின்லேடன் அங்கே குடித்தனம் போனதில் அவருக்கு நடந்த நல்லது என்று பார்த்தால், இருக்க இடம் கிடைத்தது மட்டும்தான். உண்மையில் அல் காயிதா சூடானில் இருந்த ஐந்தாண்டுக் காலமும் அதுதான் அந்நாட்டை வாழ வைத்துக்கொண்டிருந்தது. பல்வேறு தொழில்களிலும் விவசாயத்திலும் ஒசாமா முதலீடு செய்தார். சொந்தமாகவும் சில நிறுவனங்களைத் தொடங்கி, உள்ளூர் சூடானியருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தார். போதாக் குறைக்கு ஆட்சியாளர்களுக்கும் அவ்வப்போது வேண்டிய சகாயம் செய்துகொடுத்துக்கொண்டு, ஒரு மாதிரி, வரையறுக்கப்பட்ட சூடானியக் காவல் தெய்வம் போலவே வாழ்ந்தார்.
ஒசாமா பணக்காரர். அவருக்கு அது சாத்தியம். இதர தீவிரவாத இயக்கங்களால் இதெல்லாம் முடியாது. விடுதலை இயக்கங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அப்துல் கரீம் கான், கலாட் மன்னரின் சகோதரராக இருக்கலாம். ராஜ குடும்பத்து சொத்தில் அவருக்கு நிச்சயமாகப் பங்கு இருந்தது. ஆனால், பாகிஸ்தான் செய்த துரோகத்தில் மனம் வெறுத்து, அந்த துரோகத்துக்குத் தனது சகோதரர் துணை போய்விட்டதில் மொத்தமாகவே கசந்துபோய்த்தான் அவர் அரண்மனையை விட்டு வெளியேறி மக்களில் ஒருவனாக நின்றார்.
அதுகூடச் சிக்கல் இல்லை. என் பங்கைப் பிரித்துக் கொடு என்று கேட்டுவிடவும் அவர் தயாராகவே இருந்தார். ஆனால் பிரித்து வாங்கிக்கொண்டு எங்கே போவது? நீ இங்கே இருக்கவே கூடாது என்று சொல்லிவிட்டார், ஆப்கன் மன்னர். வேறு நாடு, வேறு இடம் என்று உடனே மாற்றுக் கணக்குப் போடுகிற சூழல் அன்றைக்கு இல்லை. அக்கம்பக்கத்தில் பலூசிஸ்தான் விடுதலைக்கு உதவக்கூடிய நிலையில் யாருமே இருக்கவில்லை என்பதுதான் காரணம்.










Add Comment