அதிரடி ஆரம்பம்
‘அமெரிக்கா பந்தாடப்படுவதும் பங்கு போடப்படுவதும் இன்றோடு நிறுத்தப்படும்! ‘ – டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற உடன் உதிர்த்த இந்த முதல் வார்த்தைகள் உலகை அதிர வைத்தன.
உலகத் தலைவர்கள் குழம்பிப்போனார்கள். ‘அமெரிக்காவைப் பந்தாடுவது என்றால் என்ன? அமெரிக்காதான் உலகின் மிகப் பணக்கார, மிகச் சக்திவாய்ந்த நாடு! நம்மை அமெரிக்கா பந்தாடுவது போதாதா? ‘
ஆனால் டிரம்பின் பார்வையில் அமெரிக்கா ஓர் ஏமாற்றப்பட்ட நாடு. நண்பர்களாலேயே சுரண்டப்பட்ட நாடு. அதனால் ‘இனிமேல் அமெரிக்காவுக்கே முன்னுரிமை! ‘
அடுத்து, ஏழு முஸ்லிம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உள்நுழைவுத் தடை உடனே அமலாகியது. அமெரிக்க விமானநிலையங்களில் பெரும் குழப்பம் நிலவத் தொடங்கியது. வெளிநாடுகளில் பயணம் முடித்துத் திரும்பி வந்த இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 10 ஆண்டுகளாக அமெரிக்க ராணுவத்திற்கு உதவிய ஒரு ஈராக்கியத் தொழிலதிபரும் அவருடைய 5 வயது மகளும் கூட அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.















Add Comment