43. குறுக்க வந்த கௌசிக்
என்ன பார்த்துக்கொண்டிருந்தோம்? ஆம். இரானிய தூதரகம், ஆயுதப் பறிமுதல், ஆட்சிக் கலைப்பு, ஷெர் முஹம்மது மர்ரியின் கைது. ஜுல்பிகர் அலி புட்டோவின் இந்த அப்பட்டமான சர்வாதிகார நடவடிக்கையின் பின்னணியில் ஒரு கறுப்பு நகைச்சுவைக் காட்சி உள்ளது. எதற்கு மிச்சம் வைக்க வேண்டும்? அதையும் பார்த்துவிடலாம்.
பலூசிஸ்தான் விடுதலைப் படையினருக்கு இரான் ஆயுத உதவி செய்கிறது என்பதுதான் அந்த நீண்ட பெரும் சம்பவத்தின் ஒரு வரிச் சுருக்கம். அது ஏன் சாத்தியமே இல்லாத செயல் என்பதை விரிவாகவே பார்த்தோம். ஆனால் தூதரகத்தில் எப்படி ஆயுதப் பெட்டிகள் வந்தன? அது ஒன்று இருக்கிறதல்லவா? நமது திரைப்படங்களில் காட்டுவார்கள். யாரையாவது பிடித்து உள்ளே போட வேண்டும் என்று போலிஸ் முடிவு செய்துவிட்டால், அவரது இருப்பிடத்திலோ வாகனத்திலோ, சட்டைப் பையிலோ, அண்டர்வேரிலோ ஒரு கஞ்சா பொட்டலத்தைச் சொருகி வைத்துவிடுவார்கள். அந்த மாதிரி இன்னொரு நாட்டின் தூதரகத்தில் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் பெட்டி பெட்டியாகக் கொண்டு போய் அடுக்கிவிட்டு வந்திருக்க முடியுமா?
நடைமுறை சாத்தியம் இல்லை அல்லவா?
நடந்தது முற்றிலும் வேறு. நடந்த இடம் இரான் தூதரகத்துக்குச் சம்பந்தமே இல்லாத இன்னோர் இடம். உண்மையில், அது இஸ்லாமாபாத்தில் இருந்த இராக் தூதரகம்.
ஜுல்பிகர் அலி புட்டோ ஆட்சிக்கு வந்தபோது பாகிஸ்தான் உளவுத் துறையின் தலைவராக இருந்தவர் லெஃப்டினன்ட் ஜெனரல் குலாம் ஜிலானி கான். ஒரு பக்கம் இந்தியாவை அவர் கவனிக்க வேண்டும். இன்னொரு பக்கம் புதிதாகப் பிறந்திருந்த பங்களாதேஷைக் கவனிக்க வேண்டும். தவிர, எப்போதும் உள்ளது பாசமிகு பலூசிஸ்தான். கொசுறாக ஆப்கனிஸ்தானுக்குக் கொஞ்சம் கவனம், இரானுக்குக் கொஞ்சம் கருத்து, இராக்குக்கு ஒரு கண்ணையும் கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும். அன்றைய தேதியில் பாகிஸ்தான் அரசியலை அல்லது அதன் பதற்ற பாகங்களை இந்த அனைத்து நாடுகளும்தான் மறைமுகமாக வடிவமைத்துக்கொண்டிருந்தன.










Add Comment