42. பழைய குருடி
கிழக்கு பாகிஸ்தான் என்கிற மாநிலம், பங்களாதேஷ் என்கிற நாடாக உருவாகி எழுந்து நின்ற தோற்றத்தைப் பாகிஸ்தான் அரசியல்வாதிகளால் ஏற்கவோ அங்கீகரிக்கவோ முடியவில்லை. அதுகூட அடுத்தது. முதலில் அவர்களால் நடந்த சம்பவத்தை நம்பவே முடியவில்லை. போரில் பாகிஸ்தான் மிகத் தெளிவாகத் தோற்றிருந்தது. தோல்விக்குப் பொறுப்பேற்று யாஹியா கான் பதவி விலகிவிட்டார். ஜுல்பிகர் அலி புட்டோ ஆட்சிக்கு வந்துவிட்டார். ஆனபோதிலும் நடந்ததெல்லாம் கனவு என்று யாராவது சொல்லிவிட மாட்டார்களா என்றுதான் அத்தனை பாகிஸ்தான் அரசியல்வாதியும் நினைத்தார்கள்; எதிர்பார்த்தார்கள்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாம் இங்கே அமர்ந்துகொண்டு இதனைப் புரிந்துகொள்வது சிறிது கடினம்தான். ஆனால் இது பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதொரு கட்டம். பங்களாதேஷ் என்கிற புதிய நாட்டின் உதயம், பலூசிஸ்தான் என்கிற இன்னொரு புதிய நாட்டின் உதயத்துக்குத் தொடக்கப் புள்ளியாக மட்டுமே இருக்கும் என்று அன்றைக்குப் பாகிஸ்தானில் வசித்த ஒவ்வொருவரும் அஞ்சினார்கள். ஏனென்றால் பாகிஸ்தான் சுதந்தரம் அடைந்த நாளாகக் கிழக்கு பாகிஸ்தான் மாகாணம் என்னென்ன துன்பங்களை அனுபவித்து வந்ததோ, அவை அனைத்தையும் மேற்கு பாகிஸ்தானிலேயே இருந்தும் பலூசிஸ்தான் அனுபவித்தது. கணக்குப் போட்டுப் பார்த்தால் இரண்டு பிராந்தியங்களும் பிய்த்துக்கொண்டு போக நினைத்ததற்கு ஏறத்தாழ ஒரே விதமான காரணங்கள்தாம் இருந்தன.
அவர்கள் வங்காளிகள். ஆனாலும் முஸ்லிம்கள். இவர்கள் பலூச்சிகள். ஆனாலும் முஸ்லிம்கள். அவர்களது கலாசாரம் பாகிஸ்தான் கலாசாரத்துக்குச் சம்பந்தமே இல்லாதது. இவர்களது கலாசாரமும் பாகிஸ்தான் கலாசாரத்துக்குச் சம்பந்தமில்லாதது. பாகிஸ்தானின் தேசிய மொழி வங்காளிகளுக்கு ஒரு பொருட்டே அல்ல. பலூச்சிகளுக்கும் உர்தூவைக் கண்டால் ஆகாது. சுதந்தரம் அடைந்த நாளாகப் பாகிஸ்தானை ஆண்டவர்கள் யாருமே வங்காளிகளை மதித்ததில்லை. அவர்களது உணர்வுகளுக்கோ தேவைகளுக்கோ எதிர்பார்ப்புகளுக்கோ செவி சாய்த்ததில்லை. சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ராணுவத்தை அனுப்பி இனப்படுகொலை செய்துகொண்டே இருந்தார்கள். பலூசிஸ்தானிலும் இதுவேதான் நிலைமை. எனவே வங்காளிகள் சுதந்தரம் விரும்பி ஆயுதம் ஏந்தினார்கள். அதே போலத்தான் பலூச்சிகளும் சுதந்தரத்துக்காக ஆயுதம் ஏந்தினார்கள்.










Add Comment