69. இறுதிப் போர்
சிலவற்றை எத்தனை விரிவாகச் சொன்னாலும் எத்தனை முறை திரும்பத் திரும்பச் சொன்னாலும் நேரடியாக பாதிக்கப்படாதவர்களுக்குச் சரியாகப் புரியாது. அவற்றில் ஒன்று, பலூசிஸ்தானில் நபர்கள் காணாமல் போவது. இது குறித்து இந்த வரலாற்றின் பல்வேறு அத்தியாயங்களில் ஆங்காங்கே சொல்லப்பட்டிருப்பதைப் படித்திருப்பீர்கள். ஆனால் அது எந்த விதமான தாக்கத்தையும் உண்டாக்கியிராது. ஒன்றும் செய்ய முடியாது. அது அப்படித்தான். முன்னொரு காலத்தில் தூர்தர்ஷன் மட்டும் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு என்றொரு நிகழ்ச்சி வரும். யாராவது நான்கு பேர் புகைப்படங்களைப் போட்டு, பெயர், வயது, காணாமல் போன அன்று அணிந்திருந்த உடையின் நிறம் போன்றவற்றைக் குறிப்பிட்டு, தகவல் தெரிந்தால், தொடர்புகொள்ள வேண்டிய முகவரி என்று ஒன்றைச் சொல்வார்கள். கணப் பொழுது எண்ணிப் பாருங்கள். நம்மில் எத்தனை பேர் அந்நிகழ்ச்சியைக் கண்டு, காணாமல் போனவருக்காக வருந்தியிருப்போம்?
சரி, இப்படிச் சொன்னால் புரிகிறதா பாருங்கள். கடந்த பத்தாண்டுகளில் பலூசிஸ்தானில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை சுமார் நாற்பதாயிரம். கடந்த ஐம்பதாண்டுகளில், குறைந்தபட்சம் மூன்று லட்சம் பேர்.
பிள்ளை பிடிப்பதை முழு நேரத் தொழிலாகச் செய்வோர்கூட இவ்வளவு பேரைக் கடத்திச் சென்று எங்கும் பதுக்கி வைக்கவும் முடியாது; பிச்சை எடுக்க விடவும் முடியாது அல்லவா? ஆனால் பலூசிஸ்தானில் இது தினசரி சம்பவம். அரசுக்கு யார் மீதெல்லாம் சந்தேகம் வருகிறதோ, யாரெல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களோ அவர்களை வயது வித்தியாசம் பாராமல், ஆண்-பெண் பேதம் பாராமல் ராணுவம் அள்ளிப் போட்டுக்கொண்டு போய்விடும். காவல் நிலையத்தில் பெரும்பாலும் முறையான வழக்குப் பதிவு என்ற ஒன்று நடக்காது. அதனாலேயே பெரும்பாலான விவகாரங்கள் நீதிமன்றங்களுக்குச் செல்லாது. அப்படியே போகுமானாலும் ராணுவ நீதிமன்றம்தான். அங்கே சட்டங்கள் வேறு; விசாரணை முறை வேறு; தண்டனைகள் வேறு.









Add Comment