34. புனே காங்கிரஸ்
ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பிக்கிடையில் சொத்துச் சண்டை இருக்கலாம். ஆனால், வீட்டில் ஒரு விழா என்று வரும்போது அவர்கள் மற்ற சொந்தங்களுக்கு முன்னால் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்கமாட்டார்கள், தங்களுடைய பகைமையையெல்லாம் மறந்து ஒன்றுகூடுவார்கள், சேர்ந்து வேலை செய்வார்கள். சில நேரங்களில் அந்த விழாவே அவர்களைப் பழையபடி ஒன்றாக்கிவிடுவதும் உண்டு.
மரபுவாதிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் இடையிலான விரிசல்கள், மோதல்களால் திண்டாடிக்கொண்டிருந்த புணே நகருக்கு 1895ல் அப்படி ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது: அந்த ஆண்டுக்கான காங்கிரஸ் மாநாடு புணேவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது!
திலகர் குழுவினரும் ரானடே, ஆகர்கர், கோகலே குழுவினரும் கொள்கையளவில் எதிரெதிர் முனைகளில் இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் என்பது அவர்களையெல்லாம்விடப் பெரிய, நாடு முழுவதுமுள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கிற ஒரு புள்ளி. ஆண்டுதோறும் நடக்கிற காங்கிரஸ் மாநாடு முதன்முறையாகப் புணேவுக்கு வருகிறது என்றால், அதை அனைவரும் வியக்கும்படி மிகச் சிறப்பாக நடத்திக்காட்டவேண்டும் என்றுதான் அவர்கள் எல்லாரும் விரும்பினார்கள். நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகிற காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு முன்னால் புணே மக்கள் இப்படி இரண்டாகப் பிரிந்து முறைத்துக்கொண்டு நின்றால் நன்றாக இருக்காது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.









Add Comment