35. டெக்கன் சபா
மரபுவாதிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டாபோட்டிகளும் அதனால் நாட்டின் முன்னேற்றம் தடைப்படுவதும் கோகலேவுக்கு மிகுந்த எரிச்சலளித்தன. மனிதர்கள் இப்படியெல்லாமா இருப்பார்கள் என்கிற அருவருப்பு அவருக்குள் உண்டானது. இதையெல்லாம் விட்டுவிட்டு எங்காவது ஓடிவிடலாமா என்றுகூட அவர் நினைத்தார்.
1896 ஃபிப்ரவரி மாதத்தில் G. V. ஜோஷிக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ‘பூனாவின் பொதுவாழ்க்கையைப்பற்றி நினைத்தாலே எனக்குக் குமட்டுகிறது’ என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார் கோகலே, ‘குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகள் (சார்வஜனிக் சபா கை மாறியது, காங்கிரஸ் பந்தலில் தேசியச் சமூகக் கருத்தரங்கத்தை நடத்தக்கூடாது என்று நடந்த கலாட்டா போன்றவை) என் கண்களை அகலத் திறந்துவிட்டன. இங்கு பொங்கி வழிகிற தன்னலத்தையும் இழிவான செயல்பாடுகளையும் பார்க்கும்போது, இந்த ஊரை விட்டுத் தொலைதூரத்துக்குப் பறந்து சென்றுவிடமுடியாதா என்று ஏங்குகிறேன். இதற்குமேலும் நான் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை, பொதுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. என்னுடைய நேரத்தையெல்லாம் என் பள்ளிக்கும் கல்லூரிக்கும் கொடுத்துவிடவேண்டும் என்று நினைக்கிறேன். வேறு எந்தத் தொல்லைகளையும் இழுத்துப் போட்டுக்கொள்ளாமல் நிம்மதியாக உட்கார்ந்து ஓய்வெடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது.’
இந்த வரிகளில் தெரிகிற உணர்வுகளெல்லாம் உண்மை. அதே நேரம், கோகலேவால் ஒருபோதும் ஓய்வெடுக்கமுடியாது என்பதும் உண்மை. அவருடைய அரசியல் வாழ்வின் அடுத்த கட்டம் விரைவில் தொடங்கவிருந்தது, கோகலே என்னும் பெயர் மராட்டிய மண்ணில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும், இங்கிலாந்திலும்கூட ஒலிக்கவிருந்தது.










Add Comment