51. மும்முனைப் போட்டி
இன்றைக்கு ஒருவர் தேர்தலில் நிற்கிறார் என்றால், ‘எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்?’ என்று கேட்கிறோம். ஆனால், அன்றைய பம்பாய்ச் சட்டப் பேரவையின் அலுவலர் அல்லாத உறுப்பினர்களுக்குத் தொகுதிகளெல்லாம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் அந்த மாகாணத்தைச் சேர்ந்த எட்டு வெவ்வேறு அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்த எட்டில் ‘மையப் பிரிவின் மாவட்ட வாரியங்கள்’ (District Board of Central Divisions) என்ற அமைப்பு தேர்ந்தெடுக்கிற உறுப்பினர் பொறுப்புக்காகத்தான் கோகலே போட்டியிட விரும்பினார்.
பம்பாய் மாகாணத்தின் நடுப்பகுதியிலுள்ள ஆறு மாவட்டங்களைத்தான் ‘மையப் பிரிவு’ என்று அழைத்தார்கள். அந்த ஆறு மாவட்டங்களுக்கும் இந்த உறுப்பினர்தான் ஒரே பிரதிநிதி. ஆனால், அவரை அந்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். ஆறு மாவட்டங்களையும் நிர்வகிக்கிற வாரியங்களின் உறுப்பினர்கள் சேர்ந்து யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர்தான் அவர்கள் சார்பாகப் பம்பாய்ச் சட்டப் பேரவைக்குச் செல்வார்.
இந்த உறுப்பினர் பதவி 1895ம் ஆண்டில்தான் உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டில் பால கங்காதர திலகர் பம்பாய் மையப் பகுதி மாவட்டங்களின் முதல் சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார். இரண்டு ஆண்டுகளுக்குப்பின், 1897ல் அவரே மீண்டும் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அதே ஆண்டில் திலகர் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்றுவிட்டதால் அவர் பதவி விலகவேண்டியதாகிவிட்டது. அவருக்குப் பதிலாக D. S. கருட் என்பவர் இந்தப் பொறுப்பை வகித்தார்.









Add Comment