63. இனவெறி களைதல்
1902 ஏப்ரல் மாதத்தில், கோகலே நாக்பூரிலிருந்து புனேவுக்கு இரயிலில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அதே இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த லெஃப்டினன்ட் கோல்டிங்காம் என்ற இராணுவ அலுவலர் கோகலேவைப் பார்த்தார். ஆங்கிலேயர்கள்தான் உலகை ஆளப் பிறந்தவர்கள் இந்தியர்கள் எல்லாரும் அவர்களுடைய அடிமைகள் என்கிற இனவெறி கொண்ட மனிதர் அவர். முதல் வகுப்பு இரயில் பெட்டியில் ஓர் இந்தியரைப் பார்த்தவுடன் அவருக்குச் சினம் பொங்கியது, கோகலேவை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார், அவருடைய பெட்டிகளைத் தூக்கி வெளியில் வீசினார்.
சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 1893), தென்னாப்பிரிக்காவிலுள்ள பீட்டர்மாரிட்ஸ்பர்க் என்ற இரயில் நிலையத்தில் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. அங்கும் ஒரு வெள்ளைக்காரர் ஓர் இந்தியரை (அதாவது, பின்னாட்களில் கோகலேவின் மாணவரான காந்தியை) முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். அன்றைக்கு அந்த அநீதியை ஒருவரும் எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லை, காந்திக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை. அவர் இரவு முழுக்க அந்த இரயில் நிலையத்திலேயே தன்னந்தனியாகக் குளிரில் நடுங்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.










Add Comment