69. தன்னாட்சிக் குரல்
1904ம் ஆண்டு, இங்கிலாந்து அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை காணப்பட்டது. விரைவில் தேர்தல் வரக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்தார்கள். அப்போதுள்ள ஆட்சி மாறக்கூடும் என்றும், புதிதாக ஆட்சிக்கு வருகிறவர்கள் மக்களுடைய பொதுவான கசப்பெண்ணத்தைப் போக்கும்வகையில் பல மாற்றங்களைச் செயல்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்தன.
‘இங்கிலாந்தில் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை’ என்று இந்தியர்கள் இருந்துவிடமுடியாது. அங்கு யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்திய விடுதலைப் போராட்டத்துக்குச் சிறகு முளைக்கக்கூடும், அல்லது, ஏற்கெனவே இருக்கிற உரிமைகளும் நறுக்கப்படலாம். அதனால், இங்கிலாந்து அரசியல் மாற்றங்களை இந்தியர்கள் கவனிக்கத்தான் வேண்டும், அங்குள்ள அரசியல்வாதிகளிடம், குறிப்பாக, புதிதாக ஆட்சிக்கு வரக்கூடியவர்களிடம் இந்திய நிலைமையைப்பற்றியும் இந்திய மக்களுடைய கோரிக்கைகளைப்பற்றியும் தொடர்ந்து சொல்லவேண்டும், ஆதரவு திரட்டவேண்டும், அவர்கள் மனத்தில் இந்தியாவைப்பற்றிய ஒரு நல்லெண்ணம் உருவாகும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். இதனால் உடனடியாக எந்தப் பலனும் கிடைக்காவிட்டாலும், இதைப் பொறுமையாகத் தொடர்ந்து செய்தால் காலப்போக்கில் நல்ல பலன் இருக்கும்.
இதனால், இந்தியாவைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்கள் இங்கிலாந்துக்குச் சென்று, அங்குள்ள மக்களிடமும் தலைவர்களிடமும் பேசி இந்தியக் கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டவேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது. இந்தப் பணிக்காகச் சுரேந்திரநாத் பானர்ஜி, முகம்மது அலி ஜின்னா, லாலா லஜ்பத் ராய், கோகலே ஆகிய நால்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.










Add Comment