89. இந்தியாவின் வைரம்
கோகலே மாதக்கணக்கில் நோய்வாய்ப்பட்டிருந்தபோதும், அவருடைய அன்றாடப் பணி அட்டவணை சிறிதும் மாறவில்லை. நாள்தோறும் பலரைச் சந்திப்பார், உரையாடுவார், விவாதிப்பார், வழிகாட்டுவார், கடிதங்கள், ஆவணங்களை எழுதுவார், அல்லது, அவர் சொல்லச்சொல்ல மற்றவர்கள் எழுதுவார்கள். இப்படி அவர் எப்போதும் தன்னைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டார். எந்நேரமும் அவருக்கு இந்தியாவைப்பற்றிய சிந்தனைதான், கவலைதான், திட்டமிடல்தான், தீர்வுகாணல்தான்.
‘இந்தியா விடுதலையடைவது முக்கியம்தான். ஆனால் அதற்காக, நாளில் இருபத்து நான்கு மணிநேரமும் அதைப்பற்றியேதான் சிந்தித்துக்கொண்டிருக்கவேண்டுமா?’ என்று சிலர் கோகலேவிடம் கேட்டதுண்டு, ‘நீங்கள் பெரிய அறிஞர், செயற்பாட்டாளர். அவ்வப்போது மற்ற பிரச்சனைகள், போராட்டங்களைப்பற்றியும் சிந்திக்கலாமே, உங்களுடைய கருத்துகளைச் சொல்லி மக்களை வழிநடத்தலாமே!’
‘அதை நீங்கள் செய்யுங்கள். இதை நான் செய்கிறேன்’ என்று அவர்களுக்குப் பதிலளிப்பார் கோகலே, ‘முதலில், என் நாடு விடுதலை பெறவேண்டும். அதன்பிறகு, நான் மற்ற பிரச்சனைகளைப்பற்றிச் சிந்திப்பேன். இப்போதைக்கு, என்னுடைய நேரம், ஆற்றல் அனைத்தும் இந்த விடுதலைப் போராட்டத்துக்குத் தேவை.’









Add Comment