ஹைதராபாத் இனிமேல் ஆந்திராவின் தலைநகர் கிடையாது. அதுதான் பத்தாண்டுகள் முன்பே தெரியும் என்கிறீர்களா? உண்மைதான். இந்த இடைவெளியில் இன்னொரு தலைநகர் உருவாகியிருந்தால் இச்செய்தி எந்த முக்கியத்துவமும் இன்றிக் கடந்து போயிருக்கும். அரசியல் காரணங்களால் மாற்றி மாற்றி அறிவிப்புகள் வெளியிட்டுத் தற்போது தலைநகரே இல்லாமல் இருக்கிறது ஆந்திரா. மீண்டும் சந்திரபாபு நாயுடு முதல்வராகிவிட்டார். அதுவும் தனிப்பெரும்பான்மையுடன். இந்த முறை ஆந்திராவின் தலைநகர் அமராவதி என்பதை காகிதத்தில் மட்டுமல்ல…. நிஜத்திலும் சாதிக்கக் கூடும்.
கனவுத் தலைநகர் அமராவதி
2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போதும் சந்திரபாபுவின் முன்னிருந்த பெரிய சவால் தலைநகர் உருவாக்கம்தான். அப்போதுதான் பிரிந்து சென்ற தெலுங்கானாவின் ஹைதராபாத்தை விடச் சிறந்த ஒரு நகரை உருவாக்க நினைத்தார். அமராவதித் தலைநகர் திட்டம் பல ஆண்டுகள் தங்கு தடையின்றிச் செல்ல வேண்டிய ஒன்று. 58 ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டமதிப்பு என்றால் சும்மாவா? சந்திரபாபுவின் ஆட்சிக் காலத்தில் நிலங்களைக் கையகப்படுத்தி கொஞ்சம் கட்டுமானங்களையும் உருவாக்கினார். நிதி ஆதாரங்களைத் திரட்ட திருப்பதி முதல் சிங்கப்பூர் வரை பல கதவுகளைத் தட்டினார்.
சிங்கப்பூர் போல அமராவதி உருவாக வேண்டும் என்று சிங்கப்பூர்க் கட்டுமான நிறுவனங்களையே வரவழைத்தார். தோராயமாக 50 ஆயிரம் கோடியில் திட்டம் தயாரானது. உலக வங்கி, இந்திய அரசு, ஆந்திர அரசுப் பணத்துடன் ஆந்திர மக்களிடமும் துண்டேந்தி நிதி திரட்டினார். மிகக் குறுகிய காலகட்டத்தில் இதற்கான நிலங்களை கையகப்படுத்தியது பலரை ஆச்சர்யமூட்டியது.
Add Comment