தமிழ்நாடு மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை ஒரு ஆடியோ துணுக்கைக் கடந்த வாரம் வெளியிட்டார். எப்போது பேசப்பட்டது, யாரிடம் பேசப்பட்டது போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. சரியாகப் புரியாத அந்த ஆடியோவுக்கு அவர்களே ஆங்கில சப்-டைட்டிலும் போட்டிருந்தார்கள். தமிழ்நாடு முதல்வரின் மகன் உதயநிதியும், மருமகன் சபரீசனும் 30 ஆயிரம் கோடிக்கு சொத்துகளை ஒரு வருடத்தில் சேர்த்து விட்டார்கள் என்று தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.சொல்வதாக, சப்டைட்டில் சொன்னது.
இப்படியொரு தகவல் கிடைத்தால் மீடியாக்கள் பரபரப்பாகச் செய்திகள் வெளியிட வேண்டும். ஆனால், அண்ணாமலை இப்படிச் சொல்கிறார் என்று சில ஊடகங்களில் குட்டிச் செய்தி வெளியானதோடு யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. எதுவாக இருந்தாலும் பாய்ண்ட் பை பாயிண்டாக வெளுத்து வாங்கும் பிடிஆர் பெயர் அடிபடுகிறது. நாளை அவமதிப்பு வழக்குகள் பாய்ந்தால் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது எனும் முன்ஜாக்கிரதை உணர்வு காரணமாக இருக்கலாம்.
அதற்கு முகாந்திரம் இருக்கிறது. ஏனெனில் பிஜேபியின் ட்ராக் ரெக்கார்ட் அப்படி. வகை தொகையில்லாமல் எதையாவது சமூக வலைத் தளங்களில் பகிர்வதும் பின்னர் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் மன்னிப்புக் கேட்பதும் இவர்கள் குலவழக்கம். மன்னிப்பு எனும் வஜ்ராயுதம் இருக்கும் தைரியத்தில்தான் இரண்டாவது ஆடியோவும் வெளியிட்டுவிட்டு பின்னர், ஆளுநரை சந்தித்து உண்மைத்தன்மையைச் சோதிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறார் அண்ணாமலை.
Add Comment