1. மிதிபட
விடிவதற்கு நேரம் இருந்தது. ஆனால் உறக்கம் போய்விட்டதால் நாதியா எழுந்து அமர்ந்து, கண்ணைத் திறக்காமல் காலைப் பிரார்த்தனையைச் செய்தார். பிறகு எப்போதும் போலத் தன் தாயை அழைத்தபடி கண்ணைத் திறந்து பார்த்தபோது, அருகே அவர் இல்லை. சிறிது திடுக்கிட்டார். அவர் இன்னும் சற்று முன்பாக எழுந்திருக்கலாம்; தேநீர் தயாரிக்க அடுக்களைக்குச் சென்றிருக்கலாம் என்றெல்லாம் எண்ணிக்கொள்வதற்கில்லை. பலூசிஸ்தானில் எந்த ஒரு தனி நபர் அழைக்கும்போது அருகே இல்லையோ, அவர் நிரந்தரமாக இல்லாமல் போயிருக்க வாய்ப்புகள் அதிகம். மக்கள் அப்படித்தான் முதலில் நினைப்பார்கள். அச்சத்துடன்தான் தேடத் தொடங்குவார்கள்.
நாதியா தேடியபோது அவரது தாய் வீட்டில் இல்லை என்று தெரிந்தது. தமது சகோதர, சகோதரிகளுக்குத் தகவல் சொன்னார். அக்கம்பக்கத்தில் விசாரித்தார். நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்து கேட்டார். பதற்றமும் அச்சமும் கூடி, அவசர அவசரமாகக் குளித்து, வெள்ளைச் சட்டையும் கறுப்பு பேன்ட்டும் அணிந்து, வாங்கி வைத்திருந்த புதிய கறுப்பு நிற மேல் அங்கியை எடுத்தபோது அவருக்கு அழுகை வந்தது. ஆனால் இப்போது அழுதுகொண்டிருக்க நேரமில்லை. எப்போதாவது ஓய்வு கிடைக்கும்போது உட்கார்ந்து அழுதுகொள்ளலாம். இப்போது நீதிமன்றத்துக்குப் புறப்பட்டாக வேண்டும்.
பிறந்தபோது அவர் எல்லா குழந்தைகளையும் போலத் தாய் தந்தைக்கு மட்டுமே உரியவராக இருந்தார். பிறகு பலூசிஸ்தானில் எல்லா தாய் தந்தையரும் செய்வது போல நாதியாவை அவரது பெற்றோர் தம் மக்களுக்காக நேர்ந்து விட்டார்கள். நாதியா, பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு குவெத்தா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். படிப்பு முடிந்து, பட்டம் பெற்று, வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்ட பின்பு அவர் கையிலெடுத்திருந்த முதல் வழக்கு அன்றைக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்தது. அது அவரது மூத்த சகோதரியின் மீது பாகிஸ்தான் அரசாங்கம் தொடுத்திருந்த வழக்கு.
ஒரு வழக்கறிஞராகத் தாம் முதல் முதலில் வாதாடவிருக்கிற வழக்கில் நிச்சயமாகத் தோற்கத்தான் போகிறோம் என்பது நாதியாவுக்குத் தெரியும். அதற்காகப் பின்வாங்க முடியாது. நீதிமன்றத்துக்குச் செல்லாமல் இருக்க முடியாது. வழக்கறிஞராக இல்லாது போனாலும் மஹ்ராங் பலோச்சின் சகோதரியாகவேகூட இல்லாது போனாலும், மக்களுக்காகவும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்காகவும் நேர்ந்துவிடப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்த பெண்ணாக அது அவரது கடமை. அதில் தவற முடியாது. என்னவானாலும் சரி. இறைவன் என் தாயைக் காக்கட்டும். இறைவன் என் சகோதரியைக் காக்கட்டும். இறைவன் எம்மக்களைக் காக்கட்டும். நான் புறப்படுகிறேன்.










திரு.பரா அவர்களுக்கு இந்தியாவிடம் இடம் கேட்கும் பாக்கிஸ்தான் பலுசிஸ்தானுக்கு ஏன் விடுதலை தர மறுக்கிறது.
78 ஆண்டு கால போராட்டம் விரைவில் நிறைவேற வேண்டும். நன்றி