2. குரலும் பொருளும்
நீங்கள் கரையில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். கண்ணெதிரே ஆறு பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஓட்டத்தின் வேகத்தையும் சுழிப்புகளின் ஆழத்தையும் அடித்துச் செல்லப்படும் பிரம்மாண்டமான மரங்களையும் தொலைவில் தத்தளித்துத் தள்ளாடி முன்னேறும் சிறிய படகுகளையும் திகைப்போடு பார்க்கிறீர்கள். ஆசை மிகுந்தாலும், அபாயம் கருதிக் கால் வைக்க யோசிக்கிறீர்கள். ஆனால் வைத்த கண்ணை எடுக்க முடிவதில்லை. ஆற்றின் பேருரு உங்களைத் திக்குமுக்காடச் செய்கிறது. இந்நிகரற்ற படைப்பின் தொடக்கமும் முடிவும் எப்படி இருக்கும் என்று மனத்துக்குள் விரித்துப் பார்க்க முயற்சி செய்கிறீர்கள். ஆறுகள் கடலில் சென்று சேரும். எனவே அதன் முடிவு ஒரு பெருங்கடல். ஆழமும் அலையடிப்பும் கொண்டது. ஓசை மிக்கது. சூட்சுமமானது. அதை உணர முடிகிறது. ஆனால் தொடக்கம் எப்படி இருக்கும்?
அது சிறிய ஊற்றிலிருந்து தோன்றியிருக்கலாம். அல்லது ஓர் ஏரியிலிருந்து புறப்பட்டிருக்கலாம். உருகும் பனிப்பாறைகளிலிருந்து உற்பத்தியாகியிருக்கலாம். எங்கே தோன்றியதென்றே கண்டறியப்படாமல் ஏதேனும் ஒரு மலை இடுக்கிலிருந்து கொப்பளித்து வெளிப்பட்டிருக்கலாம். இந்தப் புள்ளியில் இது பிறந்தது என்று அறுதியிடுவது சிரமம். ஆறு சென்று சேரும் கடலின் உருவம் உங்களுக்குத் தெரியும். ஆறு பிறக்கும் இடத்தை அருகிலிருந்து பார்த்திருக்க மாட்டீர்கள் அல்லவா?
ஆறு மட்டுமல்ல. வரலாறும் அப்படித்தான். தொடக்கம் பூடகமாக இருக்கும். பூஞ்சை படிந்திருக்கும். அல்லது பாதி அழிந்திருக்கும். மட்கிப் போயிருக்கும். அவரவர் வசதிக்கேற்ப மாற்றிச் சொல்லி உருக்குலைத்திருப்பார்கள். தொடக்கமே தெரியாதவண்ணம் சுற்றுச்சுவர் எழுப்பி, வெளிப்புறம் பெரிதாக அகழி வெட்டி, முதலை வளர்ப்பார்கள். எதுவும் சாத்தியம். ஏனெனில், எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எப்போதும் இருப்பது மனிதர்களே அல்லவா? மனிதன் மகத்தானவன் மட்டுமல்ல. அவசியம் ஏற்பட்டால் மலினமானவனும்கூட.
எனவே எங்கும் எதிலும் குழப்பம் நேராதிருப்பதன் பொருட்டு பலூசிஸ்தானின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அதன் இன்றைய சுதந்தரப் பிரகடனப் புள்ளியில் இருந்து பின்னோக்கிப் பார்க்கத் தொடங்கலாம். கடலில் இருந்து தடம் பிடித்து ஆற்றின் ஊற்றுக்கண்ணுக்கு.
உயரங்களையும் துயரங்களையும் அடிவாரத்திலிருந்து அளப்பதே சரி.
டைம்ஸ் இதழ் சுட்டிக்காட்டிய உலகின் நூறு முக்கியப் புள்ளிகளில் ஒருவர் டாக்டர் மஹ்ராங் பலோச். பலூச் இன மக்களின் மனச்சாட்சியென அறியப்படுபவர். அம்மாநிலத்தில் முகமாக உலகம் இந்நாள்வரை அறிந்துள்ள ஒரே நபர். ஒருவேளை பலூசிஸ்தான் மக்களின் தனிநாடு கனவு நனவாகி, ஐநாவும் அதன் உறுப்புகளும் அதனை அங்கீகரித்து, அங்கே முதல் ஆட்சி என்ற ஒன்று அமையுமானால் சந்தேகமின்றிப் பிரதமராக அமரக்கூடியவர் என்று இப்போதே பேசப்படுபவர். ஆனால் பலூசிஸ்தான் விடுதலைப் பிரகடனத்தை அவர் வெளியிடவில்லை. அவர் சிறையில் இருக்கிறார். பலூசிஸ்தானில் ஒரு மாபெரும் மக்கள் புரட்சி நடந்துகொண்டிருக்கிறது; சுதந்தரப் பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கிறது என்ற விவரம்கூட அவரைச் சென்று சேர்ந்திருக்குமா என்று தெரியாது. உலகறிந்த பாகிஸ்தானின் அடாவடி முகம் வேறு. பலூசிஸ்தான் மக்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகப் பாகிஸ்தான் அரசு காட்டும் அராஜக முகம் முற்றிலும் வேறு. அது இன்னும் கொடூரமானது. மேலும் ஈவு இரக்கமற்றது.









இரண்டாம் நாளே பட்டைய கிளப்புது சார். ஒரு எழுத்தாளருக்கு கிடைத்திருக்கும் அங்கீகராத்தை நினைத்தாலே புல்லரிக்குது , அம்மக்களின் சுதந்திரத்தை கொண்டாடுவோம். , உறுதி செய்வோம்.