4. காரணம் சொல்லவா?
ஹெராஃப் என்ற சொல்லுக்கு பலூச் மொழியில் ‘கரும்புயல்’ என்று பொருள். கணிக்க முடியாத தாக்குதல்களை அவர்கள் அப்படிக் குறிப்பிடுவார்கள். பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் தங்கள் தாக்குதலை அவ்வாறுதான் திட்டமிட்டது. ஓரிடத்தில் உக்கிரமான, மிகத் தீவிரமான, கோரமான தாக்குதல். பாகிஸ்தான் ராணுவமும் காவல் துறையும் அரசு இயந்திரத்தின் இதர அனைத்து உறுப்புகளும் தங்கள் மொத்த கவனத்தை அங்கே குவிக்கும் கணத்தில் வேறு சில இடங்களில் சற்றுத் தீவிரம் குறைந்த தாக்குதல்கள். ஆனால் எல்லாம் ஒரே நாள், ஒரே நேரம். அரசு யோசித்துத் தெளிவதற்குள் மீண்டும் ஓர் உக்கிரமான தாக்குதல். இங்கே அங்கே என்கிற பேதமே இல்லாமல் எங்கும் தாக்குதல், எல்லா இடங்களிலும் தாக்குதல். கரும்புயல் உத்தி என்பது இதுதான். பி.எல்.ஏ. முன்பும் சில முறை இப்படிச் செய்திருப்பதனாலேயே இம்முறை நிகழ்த்திய தாக்குதல்களை ‘ஹெராஃப் 2.0’ என்று குறிப்பிட்டது.
மங்கோச்சரில் அவர்கள் தாக்கத் தொடங்கிய ஓரிரு மணி நேரங்களில் குறி வைத்த பெரும்பாலான அரசு அலுவலகங்களைக் கைப்பற்றிவிட முடிந்தது. ஆவணங்கள், ஆயுதங்கள். இதை மட்டும் வீணாக்காமல் சேகரித்து பத்திரப்படுத்திக்கொண்டு, கட்டடங்களைக் கையோடு வெடி வைத்துத் தகர்த்துவிட்டார்கள்.
மங்கோச்சரில் இருந்த ஒரு ராணுவ முகாம் மீதும் பி.எல்.ஏ தாக்குதல் நடத்தியது. ஒப்பீட்டளவில் அதிக நேரம் எடுத்த தாக்குதல் அன்றைக்கு அதுதான். அது முடிவடைந்தபோது நான்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். சுமார் பதினைந்து பேர் காயமடைந்திருந்தார்கள்.
இத்தனைக் களேபரத்துக்கு நடுவிலும் ஏதோ ஓர் அரசு அலுவலகத்தில் (எந்தத் துறை என்ற தகவல் வெளியாகவில்லை) தப்பிச் செல்லப் பார்த்த ஊழியர்களைத் தடுத்து நிறுத்தி, ஒவ்வொருவரையும் பரிசோதித்து, இறுதியில் அப்துல் குதுஸ் என்கிற ஓர் ஊழியரை மட்டும் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். மற்றவர்கள் தப்பிச் சென்றதைத் தடுக்கவில்லை.மங்கோச்சர் மக்களுக்கே இது வினோதமாக இருந்தது. அவர்களுக்குத் தெரியும். பி.எல்.ஏ கைது செய்யும் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் உளவு சொல்வோராக இருப்பார்கள். அல்லது, பாகிஸ்தான் அரசின் ராணுவத்துக்கு வேறு ஏதாவது வகையில் உதவுவோராக இருப்பார்கள். பலூச் இனத்தில் பிறந்து, பாகிஸ்தான் ராணுவத்துக்கு உதவுவது என்பது பி.எல்.ஏ என்றுமே மன்னிக்காத செயல்பாடு. அவர்கள் தமக்கென்று தனியாக ஒரு நீதி மன்றம் வைத்திருக்கிறார்கள். குற்றவாளி என்று அவர்கள் கருதும் நபர்களை அங்கே அழைத்துச் சென்று விசாரணைக்கு நிறுத்தி, ஆதாரங்களைத் தருவார்கள். பிறகு தீர்ப்பு வரும். பெரும்பாலும் மரண தண்டனை. மிகச் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே பி.எல்.ஏவின் நீதி மன்றம் குற்றவாளிகளை எச்சரித்து அனுப்பியிருக்கிறது.









Add Comment