Home » நீ வேறு, நான் வேறு – 6
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 6

6. ஒரு நீண்ட வரலாறு

படையெடுப்புகளாலும் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளாலும்தான் பலூச்சிகள் முஸ்லிம்கள் ஆனார்கள் என்று பார்த்தோம். அந்த முதல் தலைமுறை முஸ்லிம்கள் அம்மாற்றத்தை எதிர்கொண்டது முதல், இஸ்லாத்தை விரும்பத் தொடங்கிய தலைமுறை உருவானது வரையிலான காலக்கட்டத்து பலூசிஸ்தான் மக்கள் வரலாறு எங்கும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. வரலாறு எழுதுவோரிடம் ஒரு சிக்கல் உண்டு. மக்களைப் பற்றிய தகவல் கிடைக்காமல் போனால் கூசாமல் மன்னர்களைப் பற்றியும் அந்தப்புரங்களைப் பற்றியும் எழுதி வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். உண்மையில், வரலாற்றுக்கு கௌரவம் சேர்க்கும் விதமான ஆட்சியாளர்கள் எப்போதாவதுதான் வந்து போவார்கள். இடைப்பட்ட காலங்களில் வெந்து தணிந்து, நொந்து நொடித்துப் போன தலைமுறைகள், ‘மற்றும் பலர் ஸ்டிக்கர்’ ஒட்டிய கல்லறைகளுக்குள் மறைந்து போய்க் கிடக்கும்.

பலூச்சிகள் இஸ்லாத்துக்கு மாறுவதற்கு முன்னால், தங்களை பலூச்சிகள் என்று சொல்லிக்கொண்டாலும் ஒவ்வொருவருக்கும் அவரது இனக்குழு அடையாளம் முக்கியமானதாக இருந்திருக்கிறது. எக்காலத்திலோ மேற்கொள்ளப்பட்ட ஒரு தோராயமான கணக்கெடுப்பின் அடிப்படையில் இன்றைக்கு உள்ள பலூச்சிகள் சுமார் நூற்று முப்பது இனக்குழுக்களைச் சார்ந்தவர்கள் என்பார்கள். பெரும்பாலான பலூச்சிகள் ஜொராஸ்டிர மதத்தவர்களாக இருந்தாலும் பல இனக்குழுக்கள் சிறு தெய்வ வழிபாடுகளிலும் குலக்குழு நம்பிக்கைகளிலும் ஊறிக் கிடந்திருக்கிறார்கள். அவர்கள் மொத்தமாக இஸ்லாத்துக்கு மாறிய பின்பே (சுன்னி பிரிவு) ‘நாங்கள் பலூச்சிகள்; எங்கள் மதம் இஸ்லாம்’ என்று சுருக்கமாக அறிமுகம் செய்துகொள்ளத் தொடங்கினார்கள். இது நடப்பதற்கு அவர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது. காரணமாக இருந்தவர், மிர் ஜலால் கான் என்கிற மனிதர்.

ஜலால் கான், இன்றைய பாகிஸ்தான் பகுதி பலூசிஸ்தானைச் சேர்ந்தவர் அல்லர். அன்றைக்கு பெர்சியா என்று அழைக்கப்பட்ட இன்றைய இரானின் எல்லைக்குட்பட்ட பலூச் பிராந்தியத்தைச் சேர்ந்தவர். பல்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த மக்கள் ஒருங்கிணையாமல் பலூசிஸ்தானுக்கு நிம்மதியோ அமைதியோ போரற்ற வாழ்வோ சாத்தியமில்லை என்று திடமாக நம்பினார். தமது கருத்துகளை எடுத்துச் சொல்லி, நாற்பத்து நான்கு இனக் குழுக்களை அவரால் ஒருங்கிணைக்க முடிந்தது. அப்படி ஒன்று சேர்த்த பலூச் இன மக்களை இரானிலிருந்து இன்றைய பாகிஸ்தான் எல்லைக்குள் வருகிற பலூசிஸ்தான் பிராந்தியத்துக்கு வழிநடத்தி வந்து, அங்கிருந்த இனக்குழுவினரையும் ஒருங்கிணைத்து, பலூச் மக்களின் ஒற்றுமைக்கான அவசியத்தை எடுத்துச் சொன்னார்.

விளைவு, முதல் முதலாக ஒரு பலூச் கூட்டமைப்பு உருவானது. ஒரு நாடாக, முடியரசாக, கான்களின் சாம்ராஜ்ஜியமாகப் பின்னாளில் பலூசிஸ்தான் புதிய தோற்றம் கண்டதற்கெல்லாம் தொடக்கப் புள்ளி அதுதான். ஜலால் கானின் வாரிசுகள் பலூசிஸ்தானை ஒரு சாம்ராஜ்ஜியமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். அவருக்கு ‘பலூசிஸ்தானின் தந்தை’ என்ற பெயரைக் கொடுத்துவிட்டுப் பக்கத்து ராஜ்ஜியமான பஞ்சாபின் மீதெல்லாம் படையெடுத்துச் சில பகுதிகளைக் கைப்பற்றும் அளவுக்கு பலூச்சிகள் முன்னேறத் தொடங்கியதும் அப்போதுதான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!