12. போடா, சர்தான்.
ஆரியப் படையெடுப்புக் காலத்தில் சிந்து நதிக்குக் கிழக்கே இருந்த நிலப்பரப்பை அவர்கள் இந்துஸ்தான் என்று குறிப்பிட்டார்கள். முகலாயர்கள் காலத்தில் இந்தியாவின் மேற்கு எல்லை ஆப்கனிஸ்தான் வரை நீண்டிருந்தது. அது காலம்தோறும் மாறி வந்து இறுதியில் பாகிஸ்தானின் இன்றைய வட மேற்கு எல்லைப் புற மாகாணமே இந்தியாவின் எல்லையென்று நெடுங்காலம் இருந்தது. எங்கே சென்று காலனி அமைத்தாலும், பிரிட்டிஷாருக்குப் பிராந்திய மக்களைக் குறைந்தபட்சம் இரண்டாகப் பிரித்து வைத்து ஆள்வதில்தான் விருப்பம். அடிமைப்படுத்தப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்தால் அது தம் ஆட்சிக்குக் கேடு என்பது அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்தியாவில் முஸ்லிம் லீக் என்றொரு அமைப்பு உருவானதற்கே கர்சன் பிரபு வங்காளத்தை இந்து பெரும்பான்மையினர் – முஸ்லிம் பெரும்பான்மையினர் வசிக்கும் பகுதிகளாகப் பிரித்ததுதான் முக்கியக் காரணம் (இது 1905 இல் நடந்தது) என்பதை நாம் அறிவோம். பிறகு இந்திய முஸ்லிம்களின் தனி உரிமைகள், தனி அரசியல் அமைப்பு, அவர்களது சமூக, பொருளாதார உரிமைகள்-நலனைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தெல்லாம் அன்றிருந்த முஸ்லிம் தலைவர்களுடன் பேசிப் பேசி, டிசம்பர் 30, 1906 இல் டாக்காவில் அகில இந்திய முஸ்லிம் லீக் உருவான பின்புதான் அவர்கள் அமைதி கொண்டார்கள்.
இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள். பிரிட்டன் எங்கெல்லாம் வென்று காலனி அமைத்ததோ அங்கெல்லாம் அந்தந்த இடத்தின் வசதிக்கேற்ப இன அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ மக்களைப் பிரித்துத்தான் போட்டது. கணவன்கள் தனிக்கட்சி, மனைவிகள் தனிக்கட்சி என்று மட்டும்தான் அவர்கள் உருவாக்கி வைக்கவில்லை. மற்றபடி அனைத்துவிதமான கெட்ட காரியங்களையும் ஆத்ம சுத்தியுடன் செய்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்குப் புரியவே புரியாத விஷயம் ஒன்றிருந்தது. என்ன செய்தால் பலூசிஸ்தான் மக்களைப் பிரிக்க முடியும்?










Add Comment