14. மன்னரும் மக்களும்
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதிலிருந்து நாற்பது வரையிலான பத்தாண்டுகளில் கிரகங்கள் மட்டும் சாதகமாக இருந்திருந்தால் பலூசிஸ்தான் மிக வலுவானதொரு தேசமாக உருக்கொண்டிருக்கும். விதி, ரிதம், கர்மா என்று என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் நடந்தவை நிச்சயமாக நியாயமே அல்ல.
பைசா பெறாத பலூசிஸ்தானில் படைகளைக் குவித்து வைத்துக்கொண்டிருப்பது வேண்டாத வேலை; பேசாமல் மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பிவிடலாம் என்று பிரிட்டிஷ் அரசே ஒரு கட்டத்தில் நினைக்கும் அளவுக்கு எல்லாம் நம்ப முடியாதபடியே நடக்கும் போலிருந்தது. மக்களும் இதைப் புரிந்துகொண்டார்கள். இந்தியாவெங்கும் சுதந்தரப் போராட்டம் தீவிரமடைந்துகொண்டிருந்தது. ஆண்ட வரை போதும்; கிளம்பிவிடலாமா என்று பிரிட்டன் சிந்திக்கத் தொடங்கியிருப்பது போன்ற தோற்றம் அல்லது தோற்ற மயக்கம் உருவாக ஆரம்பித்திருந்தது. இந்தியாவுக்கு ஒரு நல்லது நடக்குமென்றால் பலூசிஸ்தானுக்கும் அது நடப்பதுதானே நியாயம் என்பது அவர்களது கேள்வி.
ஆனால் இந்தியாவில் போராடிக்கொண்டிருந்தார்கள். காங்கிரஸ் ஒரு பக்கம், முஸ்லிம் லீக் ஒரு பக்கம், சமஸ்தானச் சக்கரவர்த்திகள் ஒரு பக்கம் என்று ஆளாளுக்கு அவரவர் எதிர்பார்ப்புகளை, கனவுகளை, லட்சியங்களை முன்வைத்து சலிக்காமல் முட்டி மோதிக்கொண்டிருந்தார்கள். ஆனால் பலூசிஸ்தானில் நடப்பது என்ன?
மக்கள் சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள். அமைப்பாகத் திரள ஆரம்பித்திருந்தார்கள். ஊர்வலங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் என்று அன்றைய இந்திய மாடலுடன், தங்களுக்கே உரித்தான தடாலடி முறையிலும் பிரிட்டிஷாருக்குத் தங்கள் எதிர்ப்புணர்வைக் காட்ட ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் சிக்கல் இன்னோர் இடத்தில் இருந்தது.
கான்!
எதற்கு பிரிட்டிஷாரை எதிர்த்துக்கொண்டு, போராடிக்கொண்டு, பிழைப்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டும்? இன்றைக்கு அவர்கள் எத்தனை கெடுபிடிகளை மறைமுகமாகத் திணிக்கப் பார்த்தாலும் கலாட்டை ஒரு தனி ராஜ்ஜியமாக இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள். போராட்டம் அது இதுவென்று இறங்கி, உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்று ஆகித் தொலைத்தால் என்ன செய்வது?









Add Comment