16. முஸ்லிம் லீக்
பலூசிஸ்தானில் இருந்து சிறிது வெளியே நகர்ந்து வர வேண்டிய நேரம் இது. அவர்கள் அங்கே போராடிக்கொண்டிருக்கட்டும். கலாட்டின் கான் ஒரு பக்கம் தனி ஆவர்த்தனம் வாசித்துக்கொண்டிருக்கட்டும். அவர் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமல் பிரிட்டிஷார் கள்ள அமைதி காக்கட்டும். கொஞ்சம் மூச்சைப் பிடித்துக்கொண்டு நாம் இந்தியாவில் முஸ்லிம் லீக் உருவான கதையைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம். ஏனென்றால் பலூசிஸ்தானின் வரலாற்றை இருபதாம் நூற்றாண்டில் தனது வரலாற்றின் ஒரு பக்கமாகத் திருத்திப் பணிகொள்ள பாகிஸ்தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் அடித்தளம் அங்கேதான் போடப்பட்டது.
முஸ்லிம் லீகின் பிறப்பு, பாகிஸ்தான் உருவாக எந்த அளவுக்கு உதவியதோ, அதே அளவுக்கு பலூசிஸ்தானின் விடுதலைக் கனவைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிக் கசக்கி எறியவும் காரணமாக இருந்தது. முஸ்லிம்களின் நலன் என்பதுதான் அந்த அமைப்பின் குறிக்கோள். துரதிருஷ்டவசமாக பலூச்சிகளை அவர்கள் முஸ்லிம்களாகப் பார்க்கவில்லை. பலூச்சிகளாகத்தான் பார்த்தார்களா என்றால் இல்லை. ஒழிகிறது, தம்மைப் போலவே சுதந்தரத்தை விரும்பும் மனித குலத்தின் ஒரு பிரிவினர் என்ற அளவிலாவது பொருட்படுத்தினார்களா என்றால் கிடையாது.
இத்தனைக்கும் முஸ்லிம் லீகுக்கு மிக நன்றாகத் தெரியும். பலூச்சிகள் இந்திய வம்சாவழியினர் அல்லர். இந்திய முஸ்லிம்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்திய முஸ்லிம்கள் பேசும் உர்தூவில் அவர்களுக்கு அ ஆ இ ஈ கூடத் தெரியாது. ஆனாலும் நிலம். அதன் பரப்பளவு. புதைந்திருக்கும் அதன் வளங்கள். இருக்கட்டும், பிறகு விரிவாகப் பார்க்கத்தான் போகிறோம். இப்போது முஸ்லிம் லீகைக் கொஞ்சம் தெரிந்துகொண்டுவிடலாம்.
டிசம்பர் 30, 1906 ஆம் ஆண்டு, அன்றைய கிழக்கு வங்காளத்தின் முக்கிய நகரமாகவும் இன்றைய பங்களாதேஷ் தலைநகரமாகவும் இருக்கும் டாக்காவில் அனைத்திந்திய முஸ்லிம் லீக் என்ற அரசியல் அமைப்பு தோன்றியபோது முகம்மது அலி ஜின்னாவுக்கு முப்பது வயது. எதற்கு இப்படி ஒரு மதச் சட்டை அணிந்த அமைப்பு? இது நாட்டு நலனுக்கு நல்லதே அல்ல. குறிப்பாக, இந்தியாவில் ஒற்றுமையாக வசிக்கும் இந்துக்களையும் முஸ்லிம்களையும் இது மிக நிச்சயமாகப் பிரித்துப் போடும். இது ஒரு வெட்டி வேலை, வேண்டாத வேலை என்று மேடைகளில் ஆக்ரோஷமாக முழங்கிய காங்கிரஸ்காரராக அப்போது அவர் இருந்தார்.









Add Comment