17. ஜின்னா V 1.0
பாகிஸ்தான் என்ற பகுதியைப் பிரித்து எடுத்துச் சென்றவர் என்கிற காரணத்தால் இந்தியாவில் முகம்மது அலி ஜின்னாவைக் குறித்துப் பேசுவதும் எழுதுவதும் மிகவும் குறைவு. வெற்றியடைந்த முதல் தலைமுறைப் பிரிவினைவாதி என்பதால் சரித்திரம் பேசும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில்கூடக் கண்ணை மூடிக்கொண்டு அவரை வில்லனாகச் சித்திரித்துவிடுவார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் காங்கிரஸின் நட்சத்திரப் பிரமுகர்களுள் ஒருவராக அவர் இருந்தார். காந்தி படித்த அதே கோகலே பள்ளிதான். காந்தி கடைப்பிடித்த அதே அமைதி வழிதான். காந்தி வலியுறுத்திய அதே மதச்சார்பின்மைதான்.
சமீபத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்லி, இந்தியாவின் நியாயங்களைப் புரிய வைப்பதற்குக் கனிமொழி தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவினை மத்திய அரசு அனுப்பிவைத்தது நினைவிருக்கிறது அல்லவா? அதே மாதிரிதான் ‘நீங்கள் போய் முஸ்லிம் லீகிலும் உறுப்பினராக இருங்கள்; மத அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட்ட இயக்கம் என்றாலும், அனைத்து மதங்களையும் அது அரவணைத்துச் செல்வதை உறுதி செய்ய நீங்கள் அங்கே இருப்பதுதான் சரியாக இருக்கும்’ என்று காங்கிரஸே வற்புறுத்தி அவரை முஸ்லிம் லீகுக்கு அனுப்பி வைத்தது. ஜின்னாவின் மீது அன்றைய காங்கிரஸுக்கு அவ்வளவு நம்பிக்கை. காங்கிரஸுக்கு மட்டுமல்ல. மக்களுக்கும்கூட. அவரது தொடக்க கால அரசியல் நடவடிக்கைகள் அதற்கேற்பத்தான் இருந்தன.
1876 ஆம் ஆண்டு பலூசிஸ்தானின் கலாட் மன்னருடன் பிரிட்டிஷ் அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தைக் குறித்து முன்னர் பார்த்தோம். அதன் அடிப்படையில், கலாட் ராஜ்ஜியம் என்றென்றும் சுதந்தர ராஜ்ஜியமாகவே இருக்கும்; அதே சமயம் பிரிட்டிஷ் பலூசிஸ்தான் ஏஜென்சியும் உள்ளே ஒரு மார்க்கமாகக் குறுக்குச்சால் ஓட்டிக்கொண்டிருக்கும் என்ற மறு உறுதிப் பத்திரம் கையெழுத்தானது.
இது நடந்த அதே 1876 இல்தான் முகம்மது அலி ஜின்னா கராச்சியில் பிறந்தார். நிச்சயமாக அவருக்கோ, அவரது பெற்றோருக்கோ தெரிந்திருக்காது. அந்த பலூசிஸ்தானின் சுதந்தரத்தை முற்று முழுதாகப் பறிக்கப் போவது அவர்தான் என்பது. அது பிரிட்டிஷார் செய்யாத செயல். 1757 ஆம் ஆண்டிலிருந்து 1947 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் வைசிராய்களுள் ஒருவருக்குக் கூட அந்த எண்ணம் தோன்றியதில்லை. 1930களில் இந்திய சமஸ்தானங்களுள் ஒன்றாக அதுவும் இருந்துவிட்டுப் போனாலென்ன என்று நினைத்திருக்கிறார்கள். மாட்டேன்; நான் வேறு என்று கலாட்டின் கான் முரண்டு பிடித்தபோதுகூட முறைத்துவிட்டு அமைதியாகத்தான் இருந்தார்களே தவிர, இழுத்துச் சொருகிக்கொண்டு ஒன்றுமில்லாமல் ஆக்கவில்லை.
முகம்மது அலி ஜின்னாவை சர்ச்சைக்குரிய மனிதர் என்று குறிப்பிடுவார்கள். அவரது பல அரசியல் முடிவுகள், செயல்பாடுகளைக் கொண்டு அம்முடிவுக்கு வருவது வழக்கம். தவறில்லை; அவர் எப்படிச் சிந்தித்தார், எதனால் அப்படியெல்லாம் சிந்தித்தார் என்றும் சிறிது அகழ்ந்து பார்க்கலாம்.









Add Comment