19. அணையாத நெருப்பு
அந்தப் பச்சை நிற மர மாளிகைக்கு இன்றைய வயது 133. பாகிஸ்தானில் அச்சிடப்படும் நூறு ரூபாய் நோட்டுகளில் அது இருக்கும். பலூசிஸ்தானுக்கு அது ஓர் அடையாளம். பிரிட்டிஷ் பலூசிஸ்தான் ஏஜென்சி அங்கே மடம் கட்டி வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்ட மாட மாளிகை. ஸியாரத் மாவட்டத்தில் உள்ளது. எனவே ஸியாரத் மாளிகை (Ziarat Residency) என்று பிரிட்டிஷார் குறிப்பிட்டார்கள்.
ஜியாரத் என்பது உருதுச் சொல். அம்மொழியில் அதற்குப் புனிதத் தல யாத்திரை என்று பொருள். ஜியாரத் மாவட்டத்தின் இதமான குளிரும் (கோடை காலத்திலும் குளிரும்) அடர்ந்த கானகமும் அங்கே விளையும் பழ வகைகளும் சுற்றுலாப் பயணிகளை எப்போதும் ஈர்த்துக்கொண்டே இருக்கும். புனிதம் உண்டோ இல்லையோ, ஜியாரத்துக்கு யாத்திரை செல்ல விரும்பாதவர்கள் கிடையாது.
பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட அந்தப் பச்சை நிற மர மாளிகையில்தான் முகம்மது அலி ஜின்னா தனது இறுதி நாள்களைக் கழித்தார். சுமார் எழுபது நாள்கள். அவரது காசநோய் அவரைத் தின்றது. ஓய்வெடுக்கத்தான் அங்கே சென்றார். அது நிரந்தரத் துயிலாக நிறைந்தது.
விஷயம் அதுவல்ல. ஜின்னாவின் நினைவாக அந்தப் பச்சை நிற மர மாளிகைக்குப் பாகிஸ்தான் அரசு ‘காய்தே அஸம் மாளிகை’ என்று பெயரிட்டது. அதனை ஒரு நினைவில்லம் ஆக்கி, ஜின்னா பயன்படுத்திய பொருள்கள், அவர் தொடர்பான புகைப்படங்கள், கடைசியாக அவர் உபயோகித்த கட்டில், படுக்கை, மேசை, நாற்காலி வரை காட்சிக்கு வைத்து, அதை அரசு பராமரிக்கும் சுற்றுலா இல்லமாக்கி வைத்தார்கள். நல்ல வலுவான காவல் உண்டு. இருபத்து நான்கு மணி நேரமும் உண்டு.
அதனாலென்ன. அழித்துவிடலாம் என்று பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் (BLA) முடிவு செய்தார்கள்.
அது 2013 ஆம் வருடம். ஜூன் மாதம் பதினைந்தாம் தேதி. நள்ளிரவு கடந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. காயிதே அஸம் நினைவில்லத்தின் காவலர்களும் சிறிது கண்ணயர்ந்திருந்தார்கள். அப்போது பி.எல்.ஏவின் நான்கு வீரர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அங்கே வந்து சேர்ந்தார்கள். நினைவில்லத்துக்குச் சிறிது தொலைவில் வண்டியை நிறுத்திவிட்டு, கண்ணெட்டும் தொலைவைக் கணக்கிட்டு மறைவாக நின்றுகொண்டு ஆரம்பித்தார்கள்.










Add Comment