23. உனக்காகக் குரல் கொடுப்பேன்!
ஜின்னா, முஸ்லிம் லீக்கின் தலைவர். இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் பரவி வசித்து வந்த அந்நாளைய முஸ்லிம்கள் அத்தனைப் பேரும் அவரது ஒவ்வொரு அசைவையும் கவனித்துப் பின்பற்றிக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக வட மாநிலங்களில், இன்னும் குறிப்பாக முஸ்லிம் பெரும்பான்மை உள்ள மாநிலங்களில் அவர் கிட்டத்தட்ட கடவுள். அவர் என்ன சொன்னாலும் உடனே கேட்பார்கள். இந்த சிந்திப்பது, கூடிப் பேசுவது, விவாதிப்பது, சாதக பாதகங்களை ஆராய்வது போன்ற வழக்கங்களே கிடையாது. அவருக்கு ஒரு லட்சியம் இருந்தது. சுதந்தர பாகிஸ்தான். முஸ்லிம்களுக்கு மட்டுமான ஒரு நாடு. அந்த லட்சியத்தை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறி, கிட்டத்தட்ட அதனை அடைந்துவிடும் இடத்துக்கு வந்துவிட்டிருந்தார். பிரிட்டிஷார் இந்தியத் துணைக்கண்டத்தை விட்டு முழுதாக வெளியேறிவிட்டால் மறுகணம் அவர்தான் புதிய பாகிஸ்தானின் பெருந்தலைவர். அவர் வைப்பதுதான் அங்கே சட்டம். அவர் சொல்வதுதான் வேதம். அவ்வளவு பெரிய ஆளுமை அவர்.
ஆனால், கலாட்டின் மன்னருக்கு நெருங்கிய நண்பர். மிர் அஹ்மத்யார் கான் தன்னை நம்பியதைவிட ஜின்னாவைத்தான் நம்பினார். பலூசிஸ்தான் விஷயத்தில் பேசா மடந்தையாகவே இருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எப்படியாவது சரிக்கட்டி, நல்லதாக நாலு வார்த்தை வாங்கிவிடுவதற்கு ஜின்னாவை விட்டால் வேறு ஆளே இல்லை என்று அவர் தீர்மானமாக நம்பியதன் விளைவு அது. கலாட் மன்னரின் எதிர்பார்ப்புகளை, கோரிக்கைகளை, பழைய ஒப்பந்தங்களை ஒட்டி வடிவமைக்கப்பட்ட புதிய ஒப்பந்தப் பத்திரங்களை பிரிட்டிஷ் கேபினட் நிர்வாகக் குழுவினரிடம் ஒப்படைத்து, அவர்களை பலூசிஸ்தானுக்குச் சாதகமாக ஒரு வரி பேசச் செய்யும் பொறுப்பை அவரிடமே தந்தார்.
கலாட் ஒரு சுதந்தர ராஜ்ஜியம். இந்தியாவுக்கு சுதந்தரம் வழங்கிவிட்டுச் செல்லும்போது அதை உறுதி செய்ய வேண்டும். இவ்வளவுதான் சாரம்.
மார்ச் 1946 இல், கலாட் மன்னர் தயாரித்து அனுப்பிய இரண்டு சட்ட வரைவுகள் ஜின்னா மூலம் முன்சொன்ன, வந்திறங்கிய மூவர் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. முதலாவது சட்ட வரைவு, மிக நேரடியானது. கலாட் அரசு ஒரு சுதந்தர அரசு என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கொண்டது. இரண்டாவது சட்ட வரைவு, குவெத்தா, நாசிராபாத், நுஸ்கி பிராந்தியங்களைப் பற்றியது. நாம் முன்பே இது குறித்துப் பார்த்திருக்கிறோம். பிரிட்டிஷ் பலூசிஸ்தான் ஏஜென்சி தனது சொந்த சௌகரியங்களுக்காக பலூசிஸ்தானின் சில பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அது அவர்கள் முதல் முதலில் ஆப்கன் மீது படையெடுத்துச் சென்றபோது செய்யத் தொடங்கிய காரியம். முதலில் போலன் கணவாயை ஒட்டிய சில பகுதிகள். பிறகு தேவைக்கேற்பக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் விஸ்தரித்துக்கொண்டார்கள். மேலே சொன்ன மூன்று முக்கிய நகரங்களைத் தவிரவும் சில பழங்குடி கிராமங்களும் பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. கலாட் மன்னர் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. நரி வலம் போனாலென்ன, இடம் போனாலென்ன? மேலே விழுந்து பிடுங்காத வரை சரி என்று அமைதியாக அனைத்துக்கும் தலையாட்டிக்கொண்டிருந்தார்.









Add Comment