Home » நீ வேறு, நான் வேறு – 27
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 27

27. கறுப்பு நாள்

சுதந்தர பலூசிஸ்தான் என்கிற பலூச்சிகளின் பன்னெடுங்காலக் கனவு நனவாகி ஓராண்டு கூட முழுதாக முடிவடைந்திருக்கவில்லை. பிப்ரவரி 15, 1948 அன்று முகம்மது அலி ஜின்னா, கலாட் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட சிபி நகரத்துக்குப் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக வருகை தந்தார். ஏதோ நிகழ்ச்சி, என்னவோ சிறப்புரை. அதுவல்ல உண்மை நோக்கம். கலாட் மன்னரை நேரிலேயே சந்தித்துப் பேசிவிடுவது; மணந்தால் மகாதேவி என்று சொல்லிவிடுவது. இது திட்டம்.

ஜின்னா வருகிறார் என்று நகரம் திருவிழாக் கோலம் கொண்டது. சரித்திரப் பிரசித்தி பெற்ற நகரம். சமீபத்தில்கூடச் செய்திகளில் அடிபட்டது நினைவிருக்கலாம். பாகிஸ்தானின் மிக நீண்ட ரயில் தடங்களுள் ஒன்றான குவெத்தா – பெஷாவர் இருப்புப்பாதை சிபி வழியாகச் செல்லும். போலன் கணவாய்ப் பகுதி. இங்கே வைத்துத்தான் மார்ச் 11, 2025 அன்று பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தினர் ஜாபர் எக்ஸ்பிரஸைக் கடத்தினார்கள். நாநூற்று நாற்பது பயணிகளை ரயிலை விட்டு இறக்கி உட்கார வைத்துவிட்டு, முப்பது ராணுவ வீரர்களைச் சுட்டுக் கொன்றார்கள். மறுநாள் பாகிஸ்தான் ராணுவம், பிஎல்ஏவுடன் சண்டையிட்டுப் பயணிகளை பத்திரமாக மீட்டது. பிஎல்ஏ தரப்பில் முப்பத்து மூன்று பேர் கொல்லப்பட்டார்கள். பயணிகளில் இருபத்தொரு பேர்.

அது இருக்கட்டும், பிறகு அந்தக் கதைக்கு வருவோம். இப்போது சிபிக்கு ஜின்னா வந்திருக்கிறார் அல்லவா? அங்கே போகலாம். முன்பெல்லாம் பலூசிஸ்தானுக்கு ஜின்னா வருகிறார் என்றால் மன்னருக்குத் தலைகால் புரியாது. அவர் எல்லைக்குள் காலெடுத்து வைக்கும் கணத்தில் இருந்து திரும்பிச் செல்லும் வரை ஒவ்வோர் அம்சத்தையும் அவரே முன்னின்று பார்த்துப் பார்த்துக் கவனிப்பார். ஜின்னா தங்கியிருக்கும் நாள்களில் அவரது ஒவ்வொரு வேளை உணவிலும் என்னென்ன இருக்க வேண்டும், எப்படிச் சமைக்க வேண்டும், எந்தப் பக்கம் நின்று எப்படிப் பரிமாற வேண்டும் என்பது வரை தமது ஊழியர்களுக்கு போதிப்பார். ஜின்னா அருந்தும் தேநீர், அவரது பைப்பில் அடைக்கப்பட வேண்டிய புகையிலையின் தரம் வரை கவனித்துக் கண்காணிக்கப்படும்.

அதெல்லாம் முன்னொரு காலம். இப்போது ஜின்னா எதற்கு வந்திருக்கிறார் என்று கலாட் மன்னருக்குத் தெரியும். என்ன நடக்கும் என்பது அதைக் காட்டிலும் நன்றாகவே தெரியும். அவருக்குத் தெரியாததெல்லாம் ஒன்றுதான். இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது? உறவு கசந்துவிட்ட நிலையில் பழைய நண்பரை எப்படி முகம் கொடுத்து வரவேற்பது? அதுகூடப் பிரச்னை இல்லை. மரியாதை நிமித்தமாகச் செய்ய வேண்டியவற்றை நாசூக்குக் குறையாமல் செய்துத் தொலைத்துவிடலாம். விருந்தாளியாக வந்திருக்கும் அவர் தன்னை இப்போது எப்படிப் பார்ப்பார்? எப்படிப் பேசுவார்? சிரிப்பாரா? சிரிக்கவும் முடியுமா? நண்பரே என்று அழைக்கத் தோன்றுமா? அந்தச் சொல்லில் நட்பு இருக்குமா? பாசம் இருக்குமா? பழைய நெருக்கம் இருக்குமா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!