34. கசாப்புக்காரர்
டிக்கா கான்.
பாகிஸ்தானில் இவருக்கு ‘வங்காளக் கசாப்புக்காரர்’ என்றொரு பெயர் உண்டு. 1971 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் நடந்த அனைத்துக் கலவரங்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் யாஹியா கானும் டிக்கா கானுமே மூல முதற்காரண கர்த்தாக்கள். அதனால்தான் யாஹியா கான் பாகிஸ்தானின் ஆட்சியைப் பிடித்தபோது தமது ஆருயிர் நண்பரை வங்காளத்தின் கமாண்டராக நியமித்து அழகு பார்த்தார். அதெல்லாம் பின்னால் நடந்த கதை. கொலைவெறியும் ரத்த ருசியும் கொண்ட டிக்கா கான் ஐம்பதுகளின் இரண்டாம் பகுதி ஆண்டுகளில் எவ்வாறு இருந்தார் என்றால், அதே கொலைவெறியும் ரத்த ருசியும் மிக்கவராகத்தான் இருந்தார். ஈவிரக்கம் பார்க்காமல், எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் ஏதாவது பெரிய காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமென்றால் டிக்கா கானைக் கூப்பிடு என்பார்கள். இஸ்கந்தர் மிஸ்ராவும் அதையேதான் செய்தார்.
வேண்டியது என்ன? அந்தக் கிழவன் நௌரோஸ் கான் அடங்க வேண்டும். கண்ணுக்கே தென்படாத மலை முகடுகளில் எங்கோ பதுங்கிக்கொண்டு ஆட்டமான ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறான். அவனது ராணுவத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற தகவல்கூட இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஐ.எஸ்.ஐ மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு, டீ குடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் நௌரோஸ் கானை விட்டு வைத்தால் பலூசிஸ்தான் அல்ல; பாகிஸ்தான் முழுவதும் அவனைப் பற்றிப் பேசத் தொடங்கிவிடும். அநியாயமாக சாகிற காலத்தில் அந்தக் கிழவனை ஒரு சூப்பர் ஸ்டார் ஆக்கி சாகவிடக் கூடாது.
டிக்கா கான் இஸ்கந்தர் மிஸ்ராவிடம் கேட்டது ஒரே ஒரு வினா. என்னவெல்லாம் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது?
இஸ்கந்தர் மிஸ்ரா சொன்ன பதில்: என்ன வேண்டுமானாலும் செய். நௌரோஸ் கான் கைதாக வேண்டும்.
டிக்கா கான், அந்த ஆப்பரேஷனுக்குத் தாமே தலைமை ஏற்றுக்கொண்டார். பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு, உதவிக்கு ஒரு விமானப்படையையும் வரச் சொன்னார். கலாட் பிராந்தியத்துக்குள் இருந்த அனைத்து மலையடிவார கிராமங்களும் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. நூறடிக்கு ஒரு ராணுவ வீரர் நிச்சயமாக இருப்பார். மாட்டு வண்டிகள், சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், லாரிகள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் என்று பிராந்தியத்தில் எங்கிருந்து எங்கு செல்லும் வண்டிகளானாலும் நிறுத்திப் பரிசோதிப்பார்கள். ஒவ்வொரு கிராமத்தின் எல்லைகளிலும் ராணுவ சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டன. சந்தேகத்துக்கு இடமாக யார் உலவினாலும் கூப்பிடுவார்கள். விசாரணையெல்லாம் கிடையாது. ஒருவருக்கு ஒரு தோட்டா. தூக்கிப் போடு. அடுத்தவனைக் கூப்பிடு.










Add Comment