35. தேர்தல்
நௌரோஸ் கானின் எழுச்சியும் புரட்சியும் வெற்றி பெறாது போனதில் பலூச்சிகளுக்கு வருத்தம் அதிகம் இருந்தது. ஆனால் ஓர் எண்பது வயதுக் கிழவன் பாகிஸ்தான் அரசையும் ராணுவத்தையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டி எடுத்தை அருகே இருந்து பார்த்ததில் அவர்கள் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். என்ன ஆனாலும் சரி. எத்தனைக் காலம் பிடித்தாலும் சரி. என்ன விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் சரி. பாகிஸ்தான் பிடியிலிருந்து விடுபட்டே தீர வேண்டும்.
அதுவரை பலூச்சி தேசியம் என்கிற உணர்ச்சி அவர்கள் அனைவருக்கும் இருந்தாலும், வீதிக்கு இறங்கிப் போராட முன்வந்தவர்கள் சிலர்தாம். ஆனால் எப்போது குரானை சாட்சியாக வைத்து நௌரோஸ் கானை ஏமாற்றி, அவரது படையினரை மொத்தமாகக் கைது செய்து அழித்தார்களோ அப்போது அவர்கள் முடிவு செய்தார்கள். இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு போராளியாகவே மலரும்.
இதற்கு மிக வலுவான இன்னொரு காரணம் இருந்தது. நௌரோஸ் கானைக் கைது செய்தபோது, அவரோடு கைதானவர்களுக்கு மரண தண்டனை விதித்துவிட்டு, அவரை மட்டும் வயது காரணத்தால் விட்டு வித்தார்கள் என்று பார்த்தோம் அல்லவா? உண்மையில் அதன் பின்னணியில் ஒரு மாபெரும் குரூர சிந்தனை இருந்தது.
நௌரோஸ் கானுடன் கைதானவர்களில் சிலர் அவரது மகன்கள். சிலர் மாமன் மச்சான் உறவுமுறையினர். அவரது சகோதர வழி உறவினர்களும் ஒரு சிலர் இருந்தார்கள். அவர்களையெல்லாம் தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு, உடல்களை ஓர் அறையில் வரிசையாகக் கிடத்தியது பாகிஸ்தான் ராணுவம். பிறகு, நௌரோஸ் கானிடம் சென்று, ‘உங்கள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை நீங்கள் அடையாளம் காட்ட வேண்டும்’ என்று சொல்லி, அந்த அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.










Add Comment