Home » நீ வேறு, நான் வேறு – 36
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 36

36. இறுக்கிப் பிடி!

பாகிஸ்தானை ஆண்ட மற்ற ராணுவ ஆட்சியாளர்களுடன் ஒப்பிட்டால் அயூப் கான் சற்றுப் பரவாயில்லை என்று சரித்திரம் அறிந்தோர் சொல்வார்கள். பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்காக அவர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் இன்று வரை அந்நாட்டைக் காப்பாற்றுவதில் ஓரளவு கணிசமான பங்கு வகிப்பதை மறுக்கவே முடியாது. அதைக் காட்டிலும் முக்கியமான சாதனை ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால் எழுபத்தெட்டாண்டு காலப் பாகிஸ்தான் வரலாற்றில் ஊழல் குறைவாக இருந்த காலக்கட்டம் என்பது அயூப் கானின் ஆட்சிக்காலம்தான். ராணுவ அதிகாரிதான். ஆயினும் ஓரளவு நிர்வாக நடைமுறை அறிந்தவராக இருந்தார். இந்தச் சரிதத்தின் வில்லன்களுள் ஒருவர் என்றாலும் நல்லனவற்றைச் சொல்லத்தானே வேண்டும்?

எண்ணிப் பார்த்தால், அயூப் கான் மனம் வைத்திருந்தால் பலூசிஸ்தான் பிரச்னையை மிக நிச்சயமாகத் தீர்த்திருக்கலாம். அவர்களது தன்னாட்சி அதிகாரத்தைத் திரும்பக் கொடுத்து, சிறைப் பிடித்து வைத்திருந்த மன்னரையும் இதர தலைவர்களையும் விடுதலை செய்திருந்தாலுமே போதுமானது. தனி நாட்டுக்கு வழியில்லாவிட்டாலும் தன்னாட்சி அதிகாரமாவது கிடைத்ததே என்று அப்போதைக்கு அமைதியாகியிருப்பார்கள். பாகிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு ஏழரைதான் என்பது அயூப் காலத்திலும் உறுதி செய்யப்பட்டதால்தான் பலூசிஸ்தானின் ஆயுதப் போராட்டம் வரலாறு காணாத அளவுக்குத் தீவிரம் கொள்ளத் தொடங்கியது.

அந்த 1961 ஆவது வருடத்து சட்ட மன்றத் தேர்தலையும் அதன் விளைவுகளையும் பார்த்தோம் அல்லவா? உலகச் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் பலூசிஸ்தான் பிரச்னையைப் பேசத் தொடங்கிவிட்டதில் அயூப் கான் மனம் வெறுத்துப் போனார். ஏனெனில் கள்ளத்தனமாக கலாட் ராஜ்ஜியத்தை அபகரித்த காலம் தொடங்கி அந்த ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதாம் ஆண்டு வரை புதையல் காக்கும் பூதம் போல பலூசிஸ்தான் பிரச்னையை உலகம் அறியாதபடி அவ்வளவு கவனமாகப் பொத்திப் பொத்தி வைத்துக்கொண்டிருந்தது பாகிஸ்தான். இதனை இப்போது படிப்பதற்குச் சிறிது விசித்திரமாக இருக்கக் கூடும். ஒரு சம்பவம் நிகழும்போதே சமூக ஊடகங்களில் செய்தி வந்துவிடுகிற காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அன்றைக்குப் பத்திரிகையில் வந்தால் மட்டும்தான் செய்தி. பாகிஸ்தானிலோ, அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதைத்தான் பத்திரிகை எழுதும். பாகிஸ்தான் அரசாங்கம் என்றைக்குமே பலூசிஸ்தானைப் பற்றி எதுவும் சொல்லாது. அங்கே ஊரே பற்றி எரிந்துகொண்டிருந்தாலும் இஸ்லாமாபாத்தில் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி இனிப்பு வழங்கினார் என்பது தலைப்புச் செய்தியாக வெளியாகும். ஓரிரு வருடங்கள் அல்ல. அபகரித்த நாளாக அப்படித்தான். ஆண்டவர்கள் அத்தனை பேருமே அப்படித்தான்.

நிற்க. இந்தத் தேர்தல் முடிவினை அயூப் கான் ஒரு பெரிய எச்சரிக்கை சங்கேதமாகக் கருதினார். உன்னால் என்ன முடியும்? பாகிஸ்தானுக்குள் ஒரு பகுதியாக பலூசிஸ்தானைச் சொல்லிக்கொள்வாய். அவ்வளவுதானே. எக்கேடு கெட்டு ஒழி. நான் உன் வழிக்கு வரவில்லை. ஆனால் நீ நடத்திய தேர்தலில் என் ஆள்கள்தாம் வென்றிருக்கிறார்கள். இனி நடக்கும் தேர்தல்களிலும் அப்படித்தான் நடக்கும். எங்கள் நாட்டை நாங்கள் மட்டுமே ஆள்வோம். எங்களுக்கு வேண்டியதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உன்னால் ஆனதைப் பார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!