Home » நீ வேறு, நான் வேறு – 37
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 37

37. புலி

அயூப் கான் காலத்தில் பலூசிஸ்தானில் நடத்தப்பட்ட விடுதலை இயக்கத்தினர் மீதான வேட்டை, அம்மண்ணின் சரித்திரத்தில் மிக முக்கியமானது. அதில் சந்தேகமில்லை. இருநூறு தலைவர்கள் கைதானார்கள் என்பது வெளியே தெரிந்த விவரம். என்றால், உண்மை நிலவரம் என்னவாக இருக்கலாம் என்று அம்மாநிலத்தின் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் சரித்திரத்தை முன்வைத்துச் சற்று சிந்தித்துப் பார்க்கலாம். தலைவர்களைக் கைது செய்தது மட்டுமல்ல முக்கியம். சாதாரண மக்கள் மத்தியில் புரட்சி, போராட்டம் என்றாலே அச்சம் உருவாகி வீட்டுக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொள்ளும்படியான காரியங்களைப் பாகிஸ்தான் ராணுவம் வீதி வீதியாகச் செய்தது. ஒருநாள் இருநாள் அல்ல. ஒவ்வொரு நாளும். ஒரு மாதம், ஓராண்டல்ல. தொடர்ச்சியாக. அயூப் கான் காலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் பெரும்பகுதி பலூசிஸ்தானிலேயே முறை வைத்துக்கொண்டு வலம் வந்துகொண்டிருந்தது. இதன் பொருட்டே ஐ.எஸ்.ஐ தலைமையின் பொறுப்பில் ராணுவத்தின் இன்னொரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இதர விவகாரங்களைக் கவனிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அயூப் ஒரு விஷயத்தை மறந்தார். அடக்குமுறையின் மூலமும் அச்சுறுத்தல்களின் மூலமும் மிரட்டல்களின் மூலமும் செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் விபரீத விளைவுகளை நோக்கிச் செல்வது தவிர்க்கவே முடியாது. என்ன ஆனாலும் தனது ராணுவம் அங்கே இருக்கிறது; அது பார்த்துக்கொள்ளும் என்று அவர் நினைத்தார். ஆனால், எப்படி அன்றைக்கு நௌரோஸ் கான் என்றொரு கிழட்டுச் சிங்கம் எங்கோ கண்காணாத மலை முகடுகளில் பதுங்கியிருந்து ஆட்டிப் படைத்ததோ, அதே போல இப்போது ஷெர் முஹம்மது மர்ரி என்றொரு புலி கொஹ்லு மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு வந்தது.

பலூச்சி விடுதலை இயக்க வரலாற்றில் இந்த ஷெர் முஹம்மது மர்ரியின் போராட்டம் மிக முக்கியமான அத்தியாயம். இன்றைக்கு பலூசிஸ்தானில் கோலோச்சிக்கொண்டிருக்கும் பி.எல்.ஏவின் பிறப்புக்கு இம்மனிதரும் இவரது இயக்கமுமே மூலக் காரணம். உணர்ச்சிவசப்படாமல் வரலாற்றை அலசி ஆராய முடியுமானால் கரீம் கான், நௌரோஸ் கான் உள்ளிட்ட அத்தனை பலூச்சி விடுதலை இயக்கத் தலைவர்களைக் காட்டிலும் பெருஞ்செயல்களைச் செய்தவர் ஷெர் முஹம்மது மர்ரி.

ஆனால் வினோதம் என்னவெனில் இன்றைய தலைமுறை பலூச்சிகளுக்கு இவரைக் குறித்து அதிகம் தெரியாது. மேடைகளில் பேசுவோர்கூட ஷெர் முஹம்மது மர்ரியின் பெயரைக் குறிப்பிட மறந்துவிடுகிறார்கள். கடந்த மே மாதம் பலூசிஸ்தான் விடுதலையை எக்ஸ் தளத்தில் அறிவித்து, இன்று வரை தொடர்ச்சியாகக் களமாடிக்கொண்டிருக்கும் அவ்விடுதலை இயக்கத் தலைவர்கள், இதுவரை ஒருமுறைகூட மர்ரியின் பெயரை மறந்தும் உச்சரிக்கவில்லை. இத்தனைக்கும் தான் வாழ்ந்த காலத்தில் ஒட்டுமொத்த பலூச்சிகளின் நம்பிக்கைக்குரிய ஒரே பெருந்தலைவராக அவர் கருதப்பட்டார். போராடிக்கொண்டிருந்த நாள்களில் மட்டுமல்ல; கைதாகிச் சிறையில் இருந்து காலமான நாள் வரை அவரைப் பற்றிப் பேசாத வாய் கிடையாது. ஷெர் முஹம்மது மர்ரியை மட்டும் கொன்றுவிட்டால் பலூசிஸ்தானில் கிளர்ச்சி, புரட்சி, போராட்டம் என்று எதுவும் பிறகு எழாது என்று எழுபதுகளில் பாகிஸ்தான் உளவுத் துறை சூடம் அணைத்துச் சத்தியம் செய்தது. ஆனால் அவரது இருப்பும் செயல்பாடுமே இன்று வரையிலான பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்துக்கு ஆணி வேராகத் திகழ்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!