38. புலி வேட்டை
நல்ல கன கம்பீரமான தோற்றம். எந்த ஒழுங்குக்கும் அகப்படாமல் முகமெங்கும் புதராகப் படர்ந்திருக்கும் அடர்ந்த முடி. ஒரு எட்டு முழம் வேட்டியைச் சும்மாடாகச் சுருட்டினால் என்ன அடர்த்தி வருமோ அந்தளவுக்கு உருண்டு சுருண்டு படர்ந்து நிற்கும் தலைப்பாகை. எரிந்துகொண்டிருக்கும் அடுப்பிலிருந்து இரண்டு தணலை உருவி எடுத்துச் சொருகிக்கொண்டாற் போன்ற கண்கள். குகைப்பாதை போல நீண்ட பெரும் மூக்கு. புகைப்படத்திலேயே நாலடி தள்ளி நின்று பார்க்கச் சொல்லும் அளவுக்கு ஆளும் தோளும் வேல் முருகாவென திடகாத்திரமாகத் திரண்டு நிற்பார் ஷெர் முஹம்மது மர்ரி. இந்தத் தோற்ற விவரங்கள்கூட அவரது வயது முதிர்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட ஒன்றிரண்டு படங்களைக் கொண்டு தரப்படுபவைதாம். பராரி அல்லது பராவி என்கிற அவரது இயக்கம் உருவாக்கப்பட்ட அறுபதுகளின் தொடக்க ஆண்டுகளில் அவர் எப்படி இருந்தார் என்பதற்கு சாட்சிப் படங்கள் ஏதுமில்லை.
பராரிக்கும் அதற்கு முன்பிருந்த பலூசிஸ்தான் இயக்கங்களுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு இருந்தது. முந்தைய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தையும் அரசு அலுவலகங்களையும் அங்கே பணிபுரியும் உயர் அதிகாரிகளையும் மட்டுமே தமது முதன்மை இலக்காகக் கொண்டிருந்தார்கள். பராரிதான் முதல் முதலில் மிக நேரடியாகப் பாகிஸ்தான் மக்கள் மீதும் தாக்குதல் நடத்திய இயக்கம். அரசுக்கு மிக நிச்சயமாக அச்சமூட்டுவதற்கு அது அவசியம் என்று அந்த இயக்கம் நினைத்தது. எண்ணிப் பார்த்தால் பலூசிஸ்தான் விடுதலை இயக்க வரலாற்றில் ஷெர் முஹம்மதின் செயல்பாடுகள் இன்று பெருமளவு மறக்கப்பட்டுவிட்டதற்கு அது முக்கியக் காரணமாகத் தோன்றுகிறது.
குண்டு வெடிப்புகள், துப்பாக்கிச் சூடுகள், கடத்திச் சென்று கொல்வது என்று தமக்குச் சாத்தியமாக இருந்த எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. ஷெர் முஹம்மதுக்கு முந்தைய போராளித் தலைவர்கள் பலூசிஸ்தான் எல்லைக்குள் மட்டும் இலக்குகளைத் தேர்ந்தெடுத்துத் தாக்கினார்கள். ஆனால் ஷெர் முஹம்மதின் பராரி இயக்க வீரர்கள் பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்குள் நுழைந்தும் தாக்கிவிட்டு மறைந்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இன்னொன்று, இலக்குகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, குழுத் தலைமையிடம் மட்டும் இருக்கவில்லை. எந்த வீரரும் தேர்ந்தெடுக்கலாம். காரியத்தைச் செய்து முடித்த பிறகும்கூடத் தலைமைக்குத் தெரிவிக்கலாம் என்றொரு வினோதமான வழக்கம் அவர்களிடையே இருந்திருக்கிறது.











Add Comment