பாகிஸ்தான், பஷ்தூன் பழங்குடியினரைக்கொண்டு காஷ்மீர் மீது நிகழ்த்திய திட்டமிட்ட தாக்குதல், இன்றுவரை ஒரு வரலாற்றுப் பிழையாகக் கருதப்படுகிறது. அப்பிழையின் விளைவாகப் பிறந்ததே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர். அதற்கு முன்புவரை கூட, காஷ்மீரை முழுவதுமாக இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருந்தது. தாக்குதல் தொடங்கிய நான்காம் நாளே அவ்வாய்ப்பு பறிபோனது.
கோபமோ, பயமோ, விரக்தியோ அல்லது எல்லாம் சேர்ந்ததாலோ காஷ்மீரின் மகாராஜா ஹரி சிங், காஷ்மீரை இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கும் ஆவணத்தில், 1947 அக்டோபர் 26 அன்று கையெழுத்திட்டார்.
உண்மையில், பாகிஸ்தான் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டது என்றே சொல்லவேண்டும். தான் பலவந்தமாகப் பிய்த்தெடுத்துக் கொண்ட ஒரு சிறு பகுதியுடன் காஷ்மீரிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான். ஆக்கிரமிப்பைத் தொடங்கிய தரப்பு என்பதால், காஷ்மீர் குறித்து எழும் வாதங்களின் போதெல்லாம் பாகிஸ்தானின் கரம் இந்தியாவின் கரத்தைவிடத் தாழ்ந்தே இருக்கிறது.
பாகிஸ்தான் ஏன் வன்முறையைத் தேர்ந்தெடுத்தது? எதற்காக அந்த அவசரம்?
பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமாகப் பிரித்தார் சர் சிரில் ராட்கிளிஃப். அவ்வாறு பிரிக்கும்போது, மதப் பெரும்பான்மையை முதன்மையாகக் கருத்தில் கொண்டார். நிலத்தைப் பிரிக்கும்போது போக்குவரத்து, நீர்ப்பாசன வசதிகள் துண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தினார்.
பிரித்தது போக, சுமார் ஐநூற்று அறுபத்தைந்து சமஸ்தானங்கள் மீதமிருந்தன. அவற்றை மன்னர்கள், நிஜாம்கள், நவாப்கள் மூலம் மறைமுகமாக ஆண்டு வந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியேறினால் தானாகவே அவை சுதந்தர சமஸ்தானங்கள் ஆகிவிடும். அவை தங்கள் விருப்பப்படி இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைந்துகொள்ளலாம் என்றனர் பிரிட்டிஷார்.















Add Comment