58. அந்நியனே வெளியேறு
பிரஹும்தாஹ் புக்தி 2006 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே ஆப்கனிஸ்தானில்தான் இருந்தார். அதுவும் தலைநகர் காபூலிலேயே. இதர பலூசிஸ்தான் விடுதலை இயக்க வீரர்கள், தலைவர்களெல்லாம் கந்தஹாரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முகாம் போட்டு உட்கார்ந்திருந்தபோது, மேற்படி புக்தி மட்டும் தனது குடிபடைகளுடன் காபூலில் தங்கியிருந்ததற்கு நிச்சயமாகச் சிறப்புக் காரணங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் அது வெளியே சொல்லப்படவேயில்லை. ‘என்னது? புக்தி காபூலில் இருக்கிறாரா?’ என்று ஹமீத் கர்சாய் அதிர்ச்சியடைந்ததாகக் காட்டிக்கொண்டாலும் அவர் அறியாதிருந்திருக்க வாய்ப்பில்லை. அவரென்ன. ஆப்கனிஸ்தானில் வசிக்கும் நாய் நரி பூனை பெருச்சாளிகளுக்கும்கூட பலூசிஸ்தான் போராளிகள் அங்கேதான் வசிக்கிறார்கள் என்பது தெரியும். தாலிபனுக்கும் அல் காயிதாவுக்கும் இதர ஆப்கன் இனக்குழுவினருக்கும் பலூசிஸ்தானும் கைபர் பக்துன்வாவும் எப்படியோ அப்படித்தான் அவர்களுக்கு ஆப்கனிஸ்தானின் நகரங்களும் கிராமங்களும் காடுகளும் மேடுகளும். தேச எல்லைகள் எல்லாம் ஒரு சௌகரியத்துக்கு வரைபடங்களில் கிழிக்கப்படும் கோடுகள். போராளிகள் தமது சௌகரியத்துக்கு அதைக் கிழித்து எடுத்து ஓரமாக வைத்துவிடும் வித்தை தெரிந்தவர்கள்.
அது இருக்கட்டும். அந்த ஐநா அதிகாரியான அமெரிக்கரை பிரஹும்தாஹ் புக்தி விடுதலை செய்யச் சொல்லி உத்தரவிட்டு, அந்தக் கல்யாணம் ஒரு வழியாக நடந்து முடிந்தது, ஏப்ரல் மாதம். சொல்லி வைத்தாற்போல அதே ஏப்ரலில் மூன்று பலூச்சி தேசியவாதத் தலைவர்கள் அடையாளம் தெரியாத ஒரு குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டார்கள் (ஏப்ரல் 3, 2009). குலாம் முஹம்மது பலூச், லாலா முனீர் பலூச், ஷெர் முஹம்மது பலூச் (இவர் பலூசிஸ்தான் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வேறொரு ஷெர் முஹம்மது.) ஆகிய அம்மூன்று பேரும் பலூசிஸ்தானில் முதல் வரிசை அரசியல்வாதிகள். ஊரறிந்த பிரமுகர்கள்.
தர்பாத் என்ற நகரில் நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றனுக்காக வந்துவிட்டு வெளியே வந்தபோது துப்பாக்கி முனையில் அவர்கள் கடத்தப்பட்டார்கள். பட்டப்பகலில் நடந்த கடத்தல் சம்பவத்தைப் பொதுமக்கள் பலர் பார்த்திருந்தார்கள். அவர்களுள் ஒரு சிலர், கடத்தியவர்கள் பாதுகாப்புப் படையில் பணிபுரிபவர்கள் என்று பிறகு சொன்னார்கள். பலூச்சி தலைவர்களை வேறு யார் கடத்துவார்கள்?









Add Comment