66. பிசகிய குறி
அன்றைக்குத் திங்கள் கிழமை. ஜூன் மாதம் 29 ஆம் தேதி, 2020 ஆவது வருடம். ஏழரை ஒன்பது ராகு காலமெல்லாம் முடிந்த பிறகு நிதானமாக 9.32 மணிக்குப் பாகிஸ்தான் பங்குச் சந்தை (கராச்சியின் வால் ஸ்டிரீட் என்று வருணிக்கப்படும் சுந்த்ரிகார் சாலையில் உள்ளது.) திறக்கப்பட்டது. காலை ஒன்பதரை முதல் பிற்பகல் மூன்றரை வரை அது இயங்கும் நேரம். பொதுவாகப் பத்து மணிக்கு வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கினால் பதினொன்றரை-பன்னிரண்டு மணிக்கு வீறுகொண்டு வேகமெடுக்கும். எனவே BLAவின் மஜீத் படைப் பிரிவு (பல்வேறு பிரிவுகளுள் இது ஒன்று) பத்து மணிக்குத் தாக்கலாம் என்று முடிவு செய்தது.
நான்கு பேர் கொண்ட குழு ஒன்று இதற்கென அமைக்கப்பட்டது. ஓட்டுநர் தவிர, தஸ்லீம் பலோச் என்றொரு போராளி. சல்மான் என்று இன்னொரு போராளி. சிராஜ் என்றொரு போராளி. நால்வருமே பலூசிஸ்தானில் உள்ள கெச் மாவட்டத்தைச் (முன்பு துர்பத் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது) சேர்ந்தவர்கள். இந்த நால்வருள் சல்மான் என்பவரின் தேசிய அடையாள அட்டையை ஆவணமாகச் சமர்ப்பித்து (நமது ஆதார் போலப் பாகிஸ்தானில் இதற்கு CNIC என்று பெயர்) கராச்சியில் உள்ள ஒரு டொயோட்டா ஷோரூமில் கொரல்லா ரகக் காரை (வெள்ளை நிறம்) விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். வந்த வேலையை முடித்துவிட்டு அப்படியே சொந்த ஊருக்குப் பறந்துவிட வசதி என்று நினைத்திருக்கலாம்.
அவர்கள் தானியங்கித் துப்பாக்கிகளையும் கையெறி குண்டுகளையும் வைத்திருந்தார்கள். பங்குச் சந்தைக் கட்டட வளாகத்துக்குள் நுழையும்போதே கையெறி குண்டுகளை வீசியபடி செல்வது. பிறகு காரை நிறுத்தி இறங்கிக் கண்ணில் படுவோர் அனைவரையும் சுட்டுத் தள்ளுவது. கட்டடத்துக்குள்ளே புகுந்து முடிந்தவரை சேதம் விளைவித்துவிட்டு, ஒரு சில நிமிடங்களில் வெளியேறிக் காரில் ஏறித் தப்பித்துவிடுவது. ஏதாவது சிக்கல் உண்டாகுமானால் கட்டடத்துக்குள் இருப்போரில் சிலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு தப்பிப்பது. இது அவர்களுடைய திட்டம்.









Add Comment