68. ரயிலைக் கடத்து
நீங்கள் வரைபடத்தை வைத்துக்கொண்டு குவெத்தாவில் இருந்து பெஷாவருக்குப் போகும் வழியைத் தேடினீர்கள் என்றால் இடது தோள்பட்டையிலிருந்து மூக்கைத் தொடும் தூரம் காட்டும். இரண்டு நகரங்களுமே ஆப்கனிஸ்தான் எல்லைக்கு நெருக்கமாக இருக்கும். குவெத்தா பலூசிஸ்தான் மாநிலத்தின் தலைநகரம். பெஷாவர், அதற்கு வடக்கே கைபர் பக்துன்வா மாநிலத்தின் தலைநகரம். சாலை வழி அல்லது விமான வழியில் செல்வதென்றால் சுமார் அறுநூறு கிலோ மீட்டர் தொலைவு. ஓரிரவுப் பயண நேரம்தான் எடுக்கும். ஆனால் இதே நகரங்களை ஜாபர் எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கடப்பதென்றால் 1600 கிலோ மீட்டர் தொலைவும் ஒன்றரை நாள் அவகாசமும் பிடிக்கும்.
இன்றைக்கு சரித்திரப் பிரசித்தி பெற்றுவிட்ட ஜாபர் எக்ஸ்பிரஸ் உலகின் அதி உன்னத ஊர் சுற்றி ரயில். அது குவெத்தாவில் இருந்து நேரே வடக்கு நோக்கிப் போகாது. குவெத்தாவில் புறப்பட்டு சிபி, ஜகோபாபாத், ரோப்ரி வரை தென் கிழக்கு திசையில் பயணம் செய்து, அங்கிருந்து வீறுகொண்டு வட கிழக்கு திசையில் கான்பூர், பகவல்பூர், மூல்தான் வரை போய்விட்டு, இன்னும் தீவிர வட கிழக்கில் வெறிகொண்டு லாகூர் வரை பாய்ந்துவிட்டு, அங்கிருந்து வடக்கே இஸ்லாமாபாத்துக்குப் போய், மேற்கே திரும்பி பெஷாவரைச் சென்றடையும். இது குரோம்பேட்டையில் இருந்து கோடம்பாக்கம் செல்வதற்கு, திண்டுக்கல்லுக்குப் போய் திருப்பதியைத் தொட்டு, அங்கிருந்து நகரி, திருவள்ளூர், போரூர் வழியாக அசோக் நகரைப் பிடித்து அம்பேத்கர் சாலையை அடைவதை நிகர்த்தது. ஆனால் இந்த ஒரு பயணத்தில் மொத்த பாகிஸ்தானின் குறுக்கு வெட்டுத் தோற்றம் கிடைத்துவிடும்.
இந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ஒரு பயணிகள் ரயில்தான் என்றாலும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காகவே பாசத்துடன் உருவாக்கப்பட்ட ரயில் பாதையல்ல இது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டங்களுள் ஒன்றாக 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதலில் குவெத்தாவிலிருந்து ராவல்பிண்டி வரைதான் ஓடிக்கொண்டிருந்தது. பிறகு பெஷாவர் வரை நீட்டி, தலையைச் சுற்றிக் காதைத் தொட வைத்தார்கள். பெரும்பாலும் சீன அதிகாரிகள், சீன சரக்குகள், பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தும் ரயில் இது. குவெத்தாவில் ரயில் ஏறுபவர்கள்கூடப் பெரும்பாலும் பணி நிமித்தம் பலூசிஸ்தானுக்கு வந்தவர்களாகவே இருப்பார்கள். பிறவி பலூச்சிகள் பெரிய அளவில் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்துவதில்லை. தவிர, பலூசிஸ்தானுக்கு வெளியே போய்க் கடமையாற்ற அவர்களுக்குப் பெரும்பாலும் ஏதும் இருப்பதுமில்லை.










Add Comment