70. முன்னேற்றம்
பலூசிஸ்தானில் ஒருவரைக் கைது செய்வது என்பது பெரிய விஷயமே அல்ல. எத்தனை பெரிய பிரபலமாக இருந்தாலும் அது நடக்கும். கலாட் சாம்ராஜ்ஜியத்தின் கடைசி மன்னரையே கைது செய்தவர்கள் அல்லவா பாகிஸ்தான் அரசியல்வாதிகள்? குத்துமதிப்பாக ஒரு கணக்கெடுத்துப் பார்த்தால், பலூசிஸ்தான் பிராந்தியத்தில் அரசியலில் ஈடுபட்ட அத்தனைத் தலைவர்களுமே குறைந்தது ஒரு முறையாவது கைதாகியிருக்கிறார்கள். அது போன்ற ஒன்றாகத்தான் மஹ்ராங் பலூச்சின் கைது இருக்கும் என்று ஷெபாஸ் ஷெரீப் நினைத்ததுதான் பிசகாகிப் போனது.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு பெரும் மக்கள் தலைவர் உருவாகி வருவது எங்கும் எப்போதும் நடப்பது. மஹ்ராங்கும் அப்படி வந்தவர்தாம். வித்தியாசம் என்னவெனில், அவர் அரசியல் கட்சி நடத்தவில்லை. Baloch Yakjehti Committee (BYC) என்ற மனித உரிமை இயக்கத்தைத்தான் வழி நடத்துகிறார். ஊர்வலங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள், பொதுக்கூட்டங்கள். இவ்வளவுதான் அவரது ஆயுதங்கள். பலூசிஸ்தானில் போராளி இயக்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் உள்ள செல்வாக்கினும் மஹ்ராங்குக்கு உள்ள செல்வாக்கு மிகுதி. கட்சிகள் ஒன்றிணைந்து ஏதாவது திட்டம் தீட்டினாலும் சரி; இயக்கங்கள் எதையாவது செய்ய நினைத்தாலும் சரி. ‘டாக்டர் காதில் ஒரு வார்த்தை போட்டுவிட்டு’ ஆரம்பிப்பது அங்கே வழக்கம்.
பாகிஸ்தான் அரசுக்கு இதெல்லாம் தெரியாததல்ல. ஆனால் மொத்த பலூச்சி தலைவர்களையும் பிடித்து உள்ளே வைத்துவிட வேண்டும் என்கிற ஆவேசத்தில் அவர்கள் இயங்கியதில் மஹ்ராங் விஷயம் என்னவாக உருக்கொள்ளும் என்று கணப் பொழுது சிந்திக்க மறந்தார்கள். BLA ஏப்ரல் 2025 இல் குறைந்தது ஐம்பது இடங்களில் தாக்குதல் நடத்தியது. இது ஒரு குறிப்பிட்ட பிராந்தியம் என்றில்லாமல் பலூசிஸ்தான் மாநிலமெங்கும் ஒரே சமயத்தில் நடத்தப்பட்டது. ராணுவ இலக்குகள். காவல் நிலைய இலக்குகள். அரசு அலுவலக இலக்குகள். இதற்கு முன்பு, பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கும் இந்தத் தொடர் தாக்குதல்களுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு.









Add Comment